Loading...

Loading...
நூல்கள்
௫௦௪ ஹதீஸ்கள்
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகை யின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.2 (95:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தக்வீம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்புகளை செம்மைப்படுத்தல்’ என்பது பொருள். அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال اخبرني عدي، قال سمعت البراء رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان في سفر فقرا في العشاء في احدى الركعتين بالتين والزيتون. {تقويم} الخلق
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்குமுன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டுசெல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது. ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘‘ஓதுவீராக!” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று சொன்னார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்று கூறினேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார். பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்துச் சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு), ‘‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ‘‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை (யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவு களைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்குச் சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வராக்கா பின் நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். - ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவச் சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!” என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட ‘வரக்கா’, ‘‘(நீர் கண்ட) இவர்தான் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, ‘‘(மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி வேறுசில வார்த்தைகளையும் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, ‘வரக்கா’, ‘‘ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று சொன்னார். அதன் பின்னர் ‘வரக்கா’ நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்றுபோயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، حدثني سعيد بن مروان، حدثنا محمد بن عبد العزيز بن ابي رزمة، اخبرنا ابو صالح، سلمويه قال حدثني عبد الله، عن يونس بن يزيد، قال اخبرني ابن شهاب، ان عروة بن الزبير، اخبره ان عايشة زوج النبي صلى الله عليه وسلم قالت كان اول ما بدي به رسول الله صلى الله عليه وسلم الرويا الصادقة في النوم، فكان لا يرى رويا الا جاءت مثل فلق الصبح، ثم حبب اليه الخلاء فكان يلحق بغار حراء فيتحنث فيه قال والتحنث التعبد الليالي ذوات العدد قبل ان يرجع الى اهله، ويتزود لذلك، ثم يرجع الى خديجة فيتزود بمثلها، حتى فجيه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرا. فقال رسول الله صلى الله عليه وسلم " ما انا بقاري ". قال " فاخذني فغطني حتى بلغ مني الجهد ثم ارسلني. فقال اقرا. قلت ما انا بقاري. فاخذني فغطني الثانية حتى بلغ مني الجهد، ثم ارسلني. فقال اقرا. قلت ما انا بقاري. فاخذني فغطني الثالثة حتى بلغ مني الجهد ثم ارسلني. فقال {اقرا باسم ربك الذي خلق * خلق الانسان من علق * اقرا وربك الاكرم * الذي علم بالقلم} ". الايات الى قوله {علم الانسان ما لم يعلم} فرجع بها رسول الله صلى الله عليه وسلم ترجف بوادره حتى دخل على خديجة فقال " زملوني زملوني ". فزملوه حتى ذهب عنه الروع قال لخديجة " اى خديجة ما لي، لقد خشيت على نفسي ". فاخبرها الخبر. قالت خديجة كلا ابشر، فوالله لا يخزيك الله ابدا، فوالله انك لتصل الرحم، وتصدق الحديث، وتحمل الكل، وتكسب المعدوم، وتقري الضيف، وتعين على نوايب الحق. فانطلقت به خديجة حتى اتت به ورقة بن نوفل وهو ابن عم خديجة اخي ابيها، وكان امرا تنصر في الجاهلية، وكان يكتب الكتاب العربي ويكتب من الانجيل بالعربية ما شاء الله ان يكتب، وكان شيخا كبيرا قد عمي فقالت خديجة يا ابن عم اسمع من ابن اخيك. قال ورقة يا ابن اخي ماذا ترى فاخبره النبي صلى الله عليه وسلم خبر ما راى. فقال ورقة هذا الناموس الذي انزل على موسى، ليتني فيها جذعا، ليتني اكون حيا. ذكر حرفا. قال رسول الله صلى الله عليه وسلم " اومخرجي هم ". قال ورقة نعم لم يات رجل بما جيت به الا اوذي، وان يدركني يومك حيا انصرك نصرا موزرا. ثم لم ينشب ورقة ان توفي، وفتر الوحى، فترة حتى حزن رسول الله صلى الله عليه وسلم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேத அறிவிப்பு (வஹீ) நின்று போயிருந்த இடைக் காலம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், ‘‘போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்தி ருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகி யிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களை அருளினான். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.- இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.4 அத்தியாயம் :
قال محمد بن شهاب فاخبرني ابو سلمة، ان جابر بن عبد الله الانصاري رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وهو يحدث عن فترة الوحى قال في حديثه " بينا انا امشي سمعت صوتا من السماء فرفعت بصري، فاذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والارض ففرقت منه فرجعت فقلت زملوني زملوني ". فدثروه فانزل الله تعالى {يا ايها المدثر * قم فانذر * وربك فكبر * وثيابك فطهر * والرجز فاهجر}. قال ابو سلمة وهى الاوثان التي كان اهل الجاهلية يعبدون. قال ثم تتابع الوحى
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.5 அத்தியாயம் :
حدثنا ابن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، ان عايشة رضى الله عنها قالت اول ما بدي به رسول الله صلى الله عليه وسلم الرويا الصالحة فجاءه الملك فقال {اقرا باسم ربك الذي خلق * خلق الانسان من علق * اقرا وربك الاكرم}
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، ح وقال الليث حدثني عقيل، قال محمد اخبرني عروة، عن عايشة رضى الله عنها. اول ما بدي به رسول الله صلى الله عليه وسلم الرويا الصادقة جاءه الملك فقال {اقرا باسم ربك الذي خلق * خلق الانسان من علق * اقرا وربك الاكرم * الذي علم بالقلم}
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹிரா குகையிலிருந்து), கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுவதுமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال سمعت عروة، قالت عايشة رضى الله عنها فرجع النبي صلى الله عليه وسلم الى خديجة فقال " زملوني زملوني ". فذكر الحديث
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘கஅபா’ அருகில் முஹம்மத் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, ‘‘அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا عبد الرزاق، عن معمر، عن عبد الكريم الجزري، عن عكرمة، قال ابن عباس قال ابو جهل لين رايت محمدا يصلي عند الكعبة لاطان على عنقه. فبلغ النبي صلى الله عليه وسلم فقال " لو فعله لاخذته الملايكة ". تابعه عمرو بن خالد عن عبيد الله عن عبد الكريم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.2 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، سمعت قتادة، عن انس بن مالك رضى الله عنه قال النبي صلى الله عليه وسلم لابى. " ان الله امرني ان اقرا عليك {لم يكن الذين كفروا} ". قال وسماني قال " نعم ". فبكى
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا حسان بن حسان، حدثنا همام، عن قتادة، عن انس رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لابى " ان الله امرني ان اقرا عليك القران ". قال ابى الله سماني لك قال " الله سماك لي ". فجعل ابى يبكي. قال قتادة فانبيت انه قرا عليه {لم يكن الذين كفروا من اهل الكتاب}
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?” என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், ‘‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?” என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன. அத்தியாயம் :
حدثنا احمد بن ابي داود ابو جعفر المنادي، حدثنا روح، حدثنا سعيد بن ابي عروبة، عن قتادة، عن انس بن مالك، ان نبي الله صلى الله عليه وسلم قال لابى بن كعب " ان الله امرني ان اقريك القران ". قال الله سماني لك قال " نعم ". قال وقد ذكرت عند رب العالمين قال " نعم ". فذرفت عيناه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். குதிரையை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும். இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (அதாவது அதை விற்ற தொகையின் ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவர் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். அதன் காரணத்தால், அது அவருக்குப் பாவச்சுமையாக மாறிவிடுகின்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، حدثنا مالك، عن زيد بن اسلم، عن ابي صالح السمان، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " الخيل لثلاثة، لرجل اجر، ولرجل ستر، وعلى رجل وزر، فاما الذي له اجر فرجل ربطها في سبيل الله فاطال لها في مرج او روضة، فما اصابت في طيلها ذلك في المرج والروضة، كان له حسنات، ولو انها قطعت طيلها فاستنت شرفا او شرفين كانت اثارها وارواثها حسنات له، ولو انها مرت بنهر فشربت منه ولم يرد ان يسقي به كان ذلك حسنات له فهى لذلك الرجل اجر، ورجل ربطها تغنيا وتعففا ولم ينس حق الله في رقابها ولا ظهورها فهى له ستر، ورجل ربطها فخرا ورياء ونواء فهى على ذلك وزر. فسيل رسول الله صلى الله عليه وسلم عن الحمر. قال " ما انزل الله على فيها الا هذه الاية الفاذة الجامعة {فمن يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره}
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை” என்று கூறிவிட்டு, ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் (99:7,8) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، قال حدثني ابن وهب، قال اخبرني مالك، عن زيد بن اسلم، عن ابي صالح السمان، عن ابي هريرة، رضى الله عنه سيل النبي صلى الله عليه وسلم عن الحمر فقال " لم ينزل على فيها شىء الا هذه الاية الجامعة الفاذة {فمن يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره}
தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘‘ஜிப்ரீலே, இது என்ன?” என்று கேட்டேன். ‘‘இது அல்கவ்ஸர்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شيبان، حدثنا قتادة، عن انس رضى الله عنه قال لما عرج بالنبي صلى الله عليه وسلم الى السماء قال " اتيت على نهر حافتاه قباب اللولو مجوفا فقلت ما هذا يا جبريل قال هذا الكوثر
அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘(நபியே!) நாம் உங்களுக்கு ‘அல்கவ்ஸரை’ அருளினோம்” எனும் (108:1ஆவது) இறைவசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا خالد بن يزيد الكاهلي، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن ابي عبيدة، عن عايشة رضى الله عنها قال سالتها عن قوله تعالى {انا اعطيناك الكوثر} قالت نهر اعطيه نبيكم صلى الله عليه وسلم شاطياه عليه در مجوف انيته كعدد النجوم. رواه زكرياء وابو الاحوص ومطرف عن ابي اسحاق
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (108:1ஆவது வசனத்தில் இடம்பெற் றுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்” எனத் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا هشيم، حدثنا ابو بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما انه قال في الكوثر هو الخير الذي اعطاه الله اياه. قال ابو بشر قلت لسعيد بن جبير فان الناس يزعمون انه نهر في الجنة. فقال سعيد النهر الذي في الجنة من الخير الذي اعطاه الله اياه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றி யும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை. அத்தியாயம் :
حدثنا الحسن بن الربيع، حدثنا ابو الاحوص، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت ما صلى النبي صلى الله عليه وسلم صلاة بعد ان نزلت عليه {اذا جاء نصر الله والفتح} الا يقول فيها " سبحانك ربنا وبحمدك، اللهم اغفر لي
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.2 அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابي الضحى، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول في ركوعه وسجوده " سبحانك اللهم ربنا وبحمدك، اللهم اغفر لي ". يتاول القران
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.: உமர் (ரலி) அவர்கள், ‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் குறித்து (பத்ர் போரில் கலந்துகொண்ட) நண்பர் களிடம் கேட்டார்கள். நண்பர்கள், ‘‘பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றி கொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது)” என்று கூறினர். ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ‘‘(இது,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களது இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது” என்று (விளக்கம்) கூறினேன்.3 அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي شيبة، حدثنا عبد الرحمن، عن سفيان، عن حبيب بن ابي ثابت، عن سعيد بن جبير، عن ابن عباس، ان عمر رضى الله عنه سالهم عن قوله تعالى {اذا جاء نصر الله والفتح} قالوا فتح المداين والقصور قال ما تقول يا ابن عباس قال اجل او مثل ضرب لمحمد صلى الله عليه وسلم نعيت له نفسه
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயதில்) பிள்ளைகள் இருக்க, இவரை எங்களுடன் ஏன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான்” என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர் (ரலி) அவர்கள் (தமது அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...” எனும் (110:1ஆவது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், ‘‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்” என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். ‘‘அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்)அறிவிப்புச் செய்ததாகும். ‘இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...’ அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)” என்று பதிலளித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.4 111. ‘அல்லஹப்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (111:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தப்ப’ எனும் சொல்லின் வேர்ச்சொல்லும், 40:37ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘தபாப்’ எனும் சொல்லுக்கு ‘இழப்பு’ என்பது பொருள். (11:101ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்பீப்’ எனும் சொல்லுக்கு ‘சீரழிவு’ என்று பொருள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس، قال كان عمر يدخلني مع اشياخ بدر، فكان بعضهم وجد في نفسه فقال لم تدخل هذا معنا ولنا ابناء مثله فقال عمر انه من حيث علمتم. فدعا ذات يوم فادخله معهم فما رييت انه دعاني يوميذ الا ليريهم. قال ما تقولون في قول الله تعالى {اذا جاء نصر الله والفتح} فقال بعضهم امرنا نحمد الله ونستغفره، اذا نصرنا وفتح علينا. وسكت بعضهم فلم يقل شييا فقال لي اكذاك تقول يا ابن عباس فقلت لا. قال فما تقول قلت هو اجل رسول الله صلى الله عليه وسلم اعلمه له، قال {اذا جاء نصر الله والفتح} وذلك علامة اجلك {فسبح بحمد ربك واستغفره انه كان توابا}. فقال عمر ما اعلم منها الا ما تقول
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீ ராக!” (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)” என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘‘யார் இவர்?” என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்றுகூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், ‘‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது, ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் ‘கத்’ எனும் இடைச்சொல்லை இணைத்து) ‘வ கத் தப்ப’ (அவன் அழிந்தும்விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.2 அத்தியாயம் :
حدثنا يوسف بن موسى، حدثنا ابو اسامة، حدثنا الاعمش، حدثنا عمرو بن مرة، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال لما نزلت {وانذر عشيرتك الاقربين} ورهطك منهم المخلصين، خرج رسول الله صلى الله عليه وسلم حتى صعد الصفا فهتف " يا صباحاه ". فقالوا من هذا، فاجتمعوا اليه. فقال " ارايتم ان اخبرتكم ان خيلا تخرج من سفح هذا الجبل اكنتم مصدقي ". قالوا ما جربنا عليك كذبا. قال " فاني نذير لكم بين يدى عذاب شديد ". قال ابو لهب تبا لك ما جمعتنا الا لهذا ثم قام فنزلت {تبت يدا ابي لهب وتب} وقد تب هكذا قراها الاعمش يوميذ