ஹதீஸ்கள்
#4953
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்குமுன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டுசெல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது. ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘‘ஓதுவீராக!” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்: அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று சொன்னார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்று கூறினேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார். பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்துச் சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு), ‘‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ‘‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை (யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவு களைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்குச் சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வராக்கா பின் நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். - ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவச் சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!” என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட ‘வரக்கா’, ‘‘(நீர் கண்ட) இவர்தான் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, ‘‘(மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி வேறுசில வார்த்தைகளையும் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, ‘வரக்கா’, ‘‘ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று சொன்னார். அதன் பின்னர் ‘வரக்கா’ நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்றுபோயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، حدثني سعيد بن مروان، حدثنا محمد بن عبد العزيز بن ابي رزمة، اخبرنا ابو صالح، سلمويه قال حدثني عبد الله، عن يونس بن يزيد، قال اخبرني ابن شهاب، ان عروة بن الزبير، اخبره ان عايشة زوج النبي صلى الله عليه وسلم قالت كان اول ما بدي به رسول الله صلى الله عليه وسلم الرويا الصادقة في النوم، فكان لا يرى رويا الا جاءت مثل فلق الصبح، ثم حبب اليه الخلاء فكان يلحق بغار حراء فيتحنث فيه قال والتحنث التعبد الليالي ذوات العدد قبل ان يرجع الى اهله، ويتزود لذلك، ثم يرجع الى خديجة فيتزود بمثلها، حتى فجيه الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرا. فقال رسول الله صلى الله عليه وسلم " ما انا بقاري ". قال " فاخذني فغطني حتى بلغ مني الجهد ثم ارسلني. فقال اقرا. قلت ما انا بقاري. فاخذني فغطني الثانية حتى بلغ مني الجهد، ثم ارسلني. فقال اقرا. قلت ما انا بقاري. فاخذني فغطني الثالثة حتى بلغ مني الجهد ثم ارسلني. فقال {اقرا باسم ربك الذي خلق * خلق الانسان من علق * اقرا وربك الاكرم * الذي علم بالقلم} ". الايات الى قوله {علم الانسان ما لم يعلم} فرجع بها رسول الله صلى الله عليه وسلم ترجف بوادره حتى دخل على خديجة فقال " زملوني زملوني ". فزملوه حتى ذهب عنه الروع قال لخديجة " اى خديجة ما لي، لقد خشيت على نفسي ". فاخبرها الخبر. قالت خديجة كلا ابشر، فوالله لا يخزيك الله ابدا، فوالله انك لتصل الرحم، وتصدق الحديث، وتحمل الكل، وتكسب المعدوم، وتقري الضيف، وتعين على نوايب الحق. فانطلقت به خديجة حتى اتت به ورقة بن نوفل وهو ابن عم خديجة اخي ابيها، وكان امرا تنصر في الجاهلية، وكان يكتب الكتاب العربي ويكتب من الانجيل بالعربية ما شاء الله ان يكتب، وكان شيخا كبيرا قد عمي فقالت خديجة يا ابن عم اسمع من ابن اخيك. قال ورقة يا ابن اخي ماذا ترى فاخبره النبي صلى الله عليه وسلم خبر ما راى. فقال ورقة هذا الناموس الذي انزل على موسى، ليتني فيها جذعا، ليتني اكون حيا. ذكر حرفا. قال رسول الله صلى الله عليه وسلم " اومخرجي هم ". قال ورقة نعم لم يات رجل بما جيت به الا اوذي، وان يدركني يومك حيا انصرك نصرا موزرا. ثم لم ينشب ورقة ان توفي، وفتر الوحى، فترة حتى حزن رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4953
- Book Index
- 475
Grades
- -
