ஹதீஸ்கள்
#7201
ஸஹீஹ் முஸ்லிம் - Paradise, its Description, its Bounties and its Inhabitants
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (எங்களுக்கு) அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: மக்களே! (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை நாம் மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயமாகச் செய்வோம் (21:104). கவனத்தில் வையுங்கள்! மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். கவனத்தில் வையுங்கள்! என் சமுதாயத்தாரில் சிலர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்" என்பேன். அப்போது "(இவர்கள்) உம(து இறப்பு)க்குப்பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று, "(இறைவா!)" நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாகவே இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது, நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்தையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உன் அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்" (5:117,118) என்று சொல்வேன். அப்போது என்னிடம், "நீர் இவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிகால் (சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் வகீஉ மற்றும் முஆத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பிலேயே "அப்போது, இவர்கள் உம(து இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، ح وحدثنا عبيد الله بن معاذ، حدثنا ابي كلاهما، عن شعبة، ح وحدثنا محمد بن المثنى، ومحمد بن بشار، - واللفظ لابن المثنى - قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن المغيرة بن النعمان، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بموعظة فقال " يا ايها الناس انكم تحشرون الى الله حفاة عراة غرلا { كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين} الا وان اول الخلايق يكسى يوم القيامة ابراهيم عليه السلام الا وانه سيجاء برجال من امتي فيوخذ بهم ذات الشمال فاقول يا رب اصحابي . فيقال انك لا تدري ما احدثوا بعدك . فاقول كما قال العبد الصالح { وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت انت الرقيب عليهم وانت على كل شىء شهيد * ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم} قال فيقال لي انهم لم يزالوا مرتدين على اعقابهم منذ فارقتهم " . وفي حديث وكيع ومعاذ " فيقال انك لا تدري ما احدثوا بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7201
- Book Index
- 70
Grades
- -
