ஹதீஸ்கள்
#7067
ஸஹீஹ் முஸ்லிம் - Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "(கூஃபாவின் இந்தப்) பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆனுக்குச் சுயவிளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவரிடமிருந்து நான் வந்துள்ளேன். அவர், "வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக" (44:10) எனும் இந்த வசனத்துக்கு, "மறுமை நாள் நெருங்கும்போது மக்களிடம் ஒரு புகை வந்து அவர்களது நாசிகளைப் பற்றிக்கொள்ளும். அதனால் அவர்களுக்கு ஜலதோஷம் போன்று ஏற்படும்" என விளக்கமளிக்கிறார்" என்று சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒன்றைப் பற்றி அறிந்தவர் அது குறித்துப் பேசட்டும். அறியாதவர், "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று சொல்லட்டும். ஏனெனில், தாம் அறியாத ஒன்றைப் பற்றி (தம்மிடம் கேட்கப்படும்போது) ஒருவர் "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறுவது அந்த மனிதரின் அறிவின்பாற்பட்டதாகும். இது (புகைச் சம்பவம்), எப்போது நடந்ததெனில், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது, நபி (ஸல்) அவர்கள் "யூசுஃப் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்குப் பஞ்சத்தைக் கொடுப்பாயாக!" என்று அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் துன்பமும் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்களில் ஒருவர் (பசி மயக்கத்தில்) வானத்தைப் பார்க்கும்போது தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே துன்பத்தால் காணலானார். அவர்கள் எலும்புகளைச் சாப்பிடும் நிலைக்கு ஆளாயினர். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே!"முளர்" குலத்தாருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இறை மறுப்பாளர்களான) முளர் குலத்தாருக்கா? நீர் துணிவுமிக்கவர்தான்" என்று கூறிவிட்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "வேதனையைச் (சற்று) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்குத்) திரும்புவீர்கள்" (44:15) எனும் வசனத்தை அருளினான். பிறகு மழை பொழிந்து (பஞ்சம் விலகி) செழிப்பு ஏற்பட்டபோது, முந்தைய (இணை வைக்கும்) நிலைக்கே அவர்கள் திரும்பிச்சென்றனர். அப்போதுதான் அல்லாஹ், "வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களைச் சூழ்ந்துகொள்ளும். இதுவே வதைக்கும் வேதனையாகும்" (44:10-12) எனும் வசனங்களை அருளினான். "மிகப் பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் அவர்களைத் தண்டிப்போம்" (44:16) எனும் வசனம், பத்ருப்போர் நாளைக் குறிக்கும். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
- Hadith Index
- #7067
- Book Index
- 23
Grades
- -