ஹதீஸ்கள்
#7066
ஸஹீஹ் முஸ்லிம் - Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடையே சாய்ந்து படுத்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அபூஅப்திர் ரஹ்மானே! (கூஃபாவின்) "கிந்தா" தலைவாயிலருகே பேச்சாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் "புகை" எனும் அடையாளம் (இனிமேல்தான்) நிகழும். அது (மறுமை நெருங்கும்போது வந்து) இறை மறுப்பாளர்களின் நாசியைப் பற்றிக்கொள்ளும். ஆனால், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஜலதோஷம் போன்றதையே ஏற்படுத்தும் என்று கூறுகிறார்" என்றார். உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கடும் கோபத்தோடு எழுந்து அமர்ந்து, பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களில் ஒன்றைப் பற்றி அறிந்தவர் அதைப் பற்றிப் பேசட்டும். அறியாதவர், "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறட்டும். ஏனெனில், தாம் அறியாததைப் பற்றி "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறுபவரே உங்களில் அறிஞர் ஆவார். அல்லாஹ் தன் தூதரிடம், "இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. நான் சுயமாக உருவாக்கிக் கூறுபவன் அல்லன் என்று (நபியே!) நீர் கூறுவீராக" (38:86) எனக் கூறியுள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இணைவைக்கும்) மக்கள் புறக்கணிப்பதைக் கண்டபோது, "இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்து ஏழு பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அனைத்தையும் அது அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், (பசியால்) அவர்கள் தோல்களையும் செத்தவற்றையும் உண்டனர். அவர்களில் ஒருவர் (பசி மயக்கத்தால் கண் பஞ்சடைந்து) வானத்தைப் பார்க்கும்போது, (தமக்கும் வானத்துக்கும் இடையே) புகை போன்ற ஒன்றையே கண்டார். இந்நிலையில் (இணைவைப்பாளர்களின் தலைவராயிருந்த) அபூசுஃப்யான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறும் உறவுகளைப் பேணி வாழுமாறும் கட்டளையிடுவதற்காகவே நீர் வந்துள்ளீர். ஆனால், உம்முடைய சமூகத்தாரோ (பஞ்சத்தால்) அழிந்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக!" என்று கூறினார். (அப்போதுதான்) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களைச் சூழ்ந்துகொள்ளும். இதுவே வதைக்கும் வேதனையாகும்" என்று தொடங்கி, "வேதனையைச் சிறிது நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்குத்) திரும்புவீர்கள்" என்பதுவரையுள்ள (44:10-15)வசனங்களை அருளினான். (இது இவ்வுலகில் பஞ்சத்தால் கண்ணை மறைத்த புகை மூட்டத்தையே குறிக்கிறது.) மறுமை நாளின் வேதனை(யாக இருந்தால், அது) சிறிதேனும் அகற்றப்படுமா? அடுத்து "மிகப் பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் (அவர்களைத்) தண்டிப்போம்" (44:16) என்றும் அல்லாஹ் கூறுகின்றான். இந்தப் பிடி பத்ருப்போர் நாளில் நடந்தது. புகை, கடுமையான பிடி, வேதனை, ரோம (பைஸாந்திய)ர்கள் (தோற்கடிக்கப்பட்டுப் பிறகு வென்றது) ஆகிய அடையாளங்கள் நடந்துமுடிந்து விட்டன. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
- Hadith Index
- #7066
- Book Index
- 22
Grades
- -