ஹதீஸ்கள்
#6359
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மூவர்) எங்கள் "ஃகிஃபார்" குலத்தாரைவிட்டுப் புறப்பட்டோம். ஃகிஃபார் குலத்தார் (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களையும் (வழிப்பறி, போர் ஆகியவற்றுக்கு) அனுமதிக்கப்பட்ட மாதமாக ஆக்கிக்கொண்டிருந்தனர். ஆகவே, நானும் என சகோதரர் உனைஸும் எங்கள் தாயாரும் (ஃகிஃபார் குலத்தாரின் வசிப்பிடத்தைவிட்டுப்) புறப்பட்டு எங்கள் தாய்மாமன் ஒருவரிடம் வந்து தங்கினோம். எங்கள் மாமன் எங்களைக் கண்ணியமாக நடத்தினார்; உபசரித்தார். அதைக் கண்டு அவருடைய சமுதாயத்தார் எங்கள் மீது பொறாமைப்பட்டார்கள். அவரிடம், "நீர் உம்முடைய குடும்பத்தாரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றதும் அவர்களிடம் உனைஸ் வந்துபோகிறார்" என்று (அவதூறு) கூறினர். ஆகவே, எங்கள் தாய்மாமன் எங்களிடம் வந்து தம்மிடம் கூறப்பட்டதை வெளிப்படையாகப் பேசினார். அப்போது நான், "நீர் செய்த உபகாரத்தை நீரே அசிங்கப்படுத்திவிட்டீரே! இதற்குமேல் எங்களால் உம்முடன் சேர்ந்திருக்க இயலாது. எங்கள் ஒட்டகங்களை எங்களிடம் கொண்டுவாரும்" என்றேன். அவ்வாறே (எங்கள் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டபோது) அவற்றில் நாங்கள் ஏறிப் புறப்பட்டோம். அப்போது எங்கள் மாமன் (தாம் சொன்னதை நினைத்து வருந்தியவராக) தம்மீது தமது ஆடையைப் போட்டு மூடிக் கொண்டு அழலானார். நாங்கள் பயணம் செய்து மக்காவுக்கு அருகில் ஓரிடத்தில் இறங்கினோம். அங்கு (என் சகோதரர்) உனைஸ் (ஒரு கவிஞரிடம் அவரது) ஒட்டக மந்தைக்கு எங்கள் ஒட்டக மந்தையைப் பந்தயமாக வைத்து(க் கவிதை)ப் போட்டி நடத்தினார். இறுதியில் இருவரும் ஒரு குறிகாரரிடம் (தீர்ப்புக்காகச்) சென்றனர். அந்தக் குறிகாரர் உனைஸைத் தேர்வு செய்தார். இதையடுத்து உனைஸ் எங்கள் ஒட்டக மந்தையுடன் (போட்டிக் கவிஞரின்) ஒட்டக மந்தையையும் சேர்த்துக் கொண்டுவந்தார். (இந்த ஹதீஸை அபூதர்ரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்) "என் சகோதரரின் புதல்வரே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொழுதிருக்கிறேன்" என்று கூற, அதற்கு நான், "யாரைத் தொழுதீர்கள்?"என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை" என்று கூறினார்கள். நான், "எதை நோக்கித் தொழுதீர்கள்?" என்று கேட்டேன். "என் இறைவன் என்னை முன்னோக்கச் செய்த திசையை முன்னோக்கினேன். நான் இரவுத் தொழுகை (இஷாவை) தொழுதுவிட்டு இரவின் இறுதி நேரமாகும்போது துணியைப் போல (சுருண்டு) கிடந்து சூரியன் உதிக்கும்வரை உறங்குவேன்" என்று கூறினார்கள். (தொடர்ந்து அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் உனைஸ், "நான் ஓர் அலுவல் நிமித்தம் மக்காவுக்குச் செல்கிறேன். ஆகவே, நீர் (என் பணிகள் எல்லாவற்றையும்) கவனித்துக்கொள்வீராக" என்று கூறிவிட்டு, மக்காவுக்குச் சென்றார். பின்னர் தாமதமாகவே உனைஸ் என்னிடம் திரும்பிவந்தார். அப்போது அவரிடம் நான், "(இத்தனை நாட்கள்) என்ன செய்தாய்?" என்று கேட்டேன். அதற்கு உனைஸ், "நீர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் இருக்கும் ஒரு மனிதரை மக்காவில் சந்தித்தேன். அவர் "அல்லாஹ்தான் தம்மைத் தூதராக அனுப்பியுள்ளான்" என்று கூறுகிறார்" என்று சொன்னார். நான், "மக்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு உனைஸ், "(அவர் ஒரு) கவிஞர், சோதிடர்,சூனியக்காரர் என்று சொல்கிறார்கள்" என்றார். ஆனால், கவிஞர்களில் ஒருவராக இருந்த உனைஸ் கூறினார்: நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். (நான் மட்டுமல்ல) வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள்தான் பொய்யர்கள். பிறகு நான் (என் சகோதரர் உனைஸிடம்), "இனி (என் பணிகளை) நீர் கவனித்துக் கொள்வீராக. நான் சென்று (அவரைப்) பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மக்காவுக்குச் சென்றேன். மக்காவாசிகளில் நலிந்த ஒருவரைச் சந்தித்து, அவரிடம், "நீங்கள் "மதம் மாறியவர்" என்றழைக்கக் கூடிய இந்த மனிதர் எங்கே?" என்று கேட்டேன். உடனே அவர், "இதோ! மதம் மாறிய இவரைக் கவனியுங்கள்" என்று கூறி, என்னைச் சுட்டிக்காட்டினார். உடனே அந்தப் பள்ளத்தாக்கிலிருந்த மக்கள் ஓடுகள், எலும்புகள் (எனக் கையில் கிடைத்த) அனைத்தையும் எடுத்துவந்து என்னைத் தாக்கினர். நான் மயக்கமுற்று விழுந்தேன். பிறகு நானாக மயக்கம் தெளிந்து எழுந்தபோது சிவப்பு நிற சிலையைப் போன்றிருந்தேன். பின்னர் நான் "ஸம்ஸம்" கிணற்றுக்கு வந்து, என் உடலில் படிந்திருந்த இரத்தத்தைக் கழுவினேன். ஸம்ஸம் தண்ணீரை அருந்தினேன். என் சகோதரர் புதல்வரே! (அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித்தே!) இவ்வாறு நான் முப்பது நாட்கள் அங்கு தங்கியிருந்தேன். ஸம்ஸம் கிணற்றின் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் இல்லை. ஆனால், என் வயிற்றிலிருந்த மடிப்பு அகலும் அளவுக்கு நான் பருமனாகிவிட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லை. நன்கு நிலாக்காயும் ஒரு பிரகாசமான இரவில் மக்காவாசிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இறையில்லம் கஅபாவை யாரும் (தவாஃப்) சுற்றவில்லை. மக்காவைச் சேர்ந்த இரு பெண்கள் மட்டும் (ஸஃபா மற்றும் மர்வாவில் இருந்த) இசாஃப், நாயிலா எனும் கடவுள் சிலைகளிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் (ஸஃபா - மர்வாவைச்) சுற்றிவரும்போது என்னிடம் வந்தனர். அவர்களிடம் நான், "அந்தச் சிலைகளில் ஒன்றை மற்றொன்றுக்கு மணமுடித்து வைத்து விடு" என்று சொன்னேன். ஆனால், அவர்கள் இருவரும் அவற்றைப் பிரார்த்திப்பதிலிருந்து விலகவில்லை. பிறகு (மற்றொரு சுற்றில்) அவர்கள் இருவரும் என்னிடம் வந்தபோது, ஒளிவு மறைவின்றி "(அவ்விரு சிலைகளும்) மரக்கட்டைக்கு நிகரான இன உறுப்புகளைப் போன்றவை" என்று சொன்னேன். அப்போது (எனக்குச்) சாபம் கொடுத்த அவ்விரு பெண்களும் "எங்கள் ஆட்களில் யாரேனும் இங்கிருந்திருந்தால் (நடந்திருப்பதே வேறு)" என்று சொல்லிக்கொண்டே சென்றனர். அப்போது அங்கு கீழிறங்கி வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவ்விரு பெண்களை எதிர்கொண்டனர். "உங்கள் இருவருக்கும் என்ன நேர்ந்தது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கு அப்பெண்கள், "கஅபாவுக்கும் அதன் திரைக்குமிடையே மதம் மாறிய ஒருவர் இருக்கிறார் (அவர் எங்கள் சிலைகளைக் கேவலப்படுத்தி எங்களை மனவேதனைப்படுத்திவிட்டார்)" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (உங்களிடம்) என்ன சொன்னார்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்கள், "அவர் எங்களிடம் வாய்க்கு ஒவ்வாத வார்த்தையைச் சொன்னார்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கஅபாவுக்கு) வந்து "ஹஜருல் அஸ்வதை"த் தொட்டு முத்தமிட்டுவிட்டு,கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய நண்ப(ர் அபூபக்)ரும் சுற்றிவந்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், நானே முதலில் (சென்று) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்க! (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்)" என இஸ்லாமிய முகமன் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வ அலைக்க, வ ரஹ்மத்துல்லாஹ் (அவ்வாறே உங்களுக்கும் சாந்தியும் இறையருளும் கிடைக்கட்டும்)" என்று பதில் சொன்னார்கள். பிறகு "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். நான், "ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்தவன்" என்று பதிலளித்தேன். நான் அவ்வாறு (என் குலத்தாரின் பெயரைக்) கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (கை) விரல்களைத் தமது நெற்றியின்மீது வைத்தார்கள். அப்போது நான் எனக்குள்ளே, "நான் ஃகிஃபார் குலத்தாரோடு இணைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் வெறுக்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (அன்போடு) அவர்களது கரத்தைப் பற்றிக்கொள்ளப்போனேன். ஆனால், அவர்களுடைய நண்பர் (அபூபக்ர்) என்னைத் தடுத்துவிட்டார். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி என்னைவிட அவரே நன்கறிந்தவராக இருந்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, "எத்தனை நாட்களாக இங்கிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "இரவு பகலென முப்பது நாட்களாக இங்கிருந்துகொண்டிருக்கிறேன்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இத்தனை நாட்களாக) உமக்கு உணவளித்து வந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஸம்ஸம் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும்,என் வயிற்றின் மடிப்புகள் அகலும் அளவுக்கு நான் பருமனாகிவிட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லை" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (ஸம்ஸம்) வளமிக்கதாகும். அது(ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்" என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு இன்றிரவு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக "தாயிஃப்" நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும். பின்னர் இதே நிலையில் சில நாட்கள் இருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமி எனக்கு (கனவில்) காட்டப்பட்டது. அது "யஸ்ரிப்" (மதீனா) என்றே நான் கருதுகிறேன். ஆகவே, நீங்கள் என்னைப் பற்றி(ய செய்தியை) உங்கள் குலத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பீர்களா? அல்லாஹ் உங்கள் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கக்கூடும். (நல்வழி அடைந்தால்) அவர்களுக்காக உங்களுக்கும் அவன் பிரதிபலன் அளிப்பான்"என்று கூறி (என்னை அனுப்பி)னார்கள். ஆகவே, நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் "நீங்கள் என்ன செய்தீர்கள்?"என்று கேட்டார். "நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்" என்று கூறினேன். உனைஸ், "(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்" என்று கூறினார். பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், "(நீங்கள் இருவரும் ஏற்றுள்ள) உங்கள் மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்" என்று கூறினார். பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் "ஃகிஃபார்" குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்; அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார். ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப்பேர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்" என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது,எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர். "அஸ்லம்" குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(பெயருக்கேற்பவே) "ஃகிஃபார்" குலத்தாரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்; "அஸ்லம்" குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்றவர்களாக ஆக்கிவிட்டான்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நான் (அங்கு) சென்று பார்த்துவருகிறேன். அதுவரை நீர் (என் பணிகளைக்) கவனித்துக்கொள்வீராக" என்று கூறினேன். அதற்கு உனைஸ் "சரி" என்று கூறிவிட்டு, "மக்காவாசிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்; வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னார் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "என் சகோதரர் மகனே! நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் தொழுதிருக்கிறேன்" என்று கூறினார்கள். நான், "அப்போது நீங்கள் எதை முன்னோக்கி(த் தொழுது)வந்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் என்னை முன்னோக்கச் செய்த திசையில்" என்று பதிலளித்தார்கள் என ஹதீஸ் தொடர்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன. மேலும் அந்த அறிவிப்பில், "உனைஸும் அந்த இன்னொரு மனிதரும் (கவிதைப் போட்டிக்காக) சோதிடர்களில் ஒருவரிடம் சென்றனர். அப்போது என் சகோதரர் உனைஸ், அந்தச் சோதிடரைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே அந்த மனிதரை வென்றுவிட்டார். பிறகு அந்த மனிதரிடமிருந்த ஒட்டக மந்தையை (பரிசாகப்) பெற்று எங்கள் மந்தையோடு சேர்த்துக்கொண்டோம்" என்றும் இடம்பெற்றுள்ளது. அதே அறிவிப்பில், "...பிறகு நபி (ஸல்) அவர்கள் சென்று இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டு,மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய முகமனை முதன் முதலில் கூறியவன் நான்தான். நான், "அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்க" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் "வ அலைக்கஸ் ஸலாம்" (என்று பதில் சொல்லிவிட்டு) "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், "எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறீர்?" என்று கேட்டார்கள். நான், "பதினைந்து நாட்களாக என்று பதிலளித்தேன்" என்று காணப்படுகிறது. இந்த அறிவிப்பில், "இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் (மகத்தான) வாய்ப்பினை எனக்கு வழங்குங்கள்" என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا هداب بن خالد الازدي، حدثنا سليمان بن المغيرة، اخبرنا حميد بن هلال، عن عبد الله بن الصامت، قال قال ابو ذر خرجنا من قومنا غفار وكانوا يحلون الشهر الحرام فخرجت انا واخي انيس وامنا فنزلنا على خال لنا فاكرمنا خالنا واحسن الينا فحسدنا قومه فقالوا انك اذا خرجت عن اهلك خالف اليهم انيس فجاء خالنا فنثا علينا الذي قيل له فقلت له اما ما مضى من معروفك فقد كدرته ولا جماع لك فيما بعد . فقربنا صرمتنا فاحتملنا عليها وتغطى خالنا ثوبه فجعل يبكي فانطلقنا حتى نزلنا بحضرة مكة فنافر انيس عن صرمتنا وعن مثلها فاتيا الكاهن فخير انيسا فاتانا انيس بصرمتنا ومثلها معها - قال - وقد صليت يا ابن اخي قبل ان القى رسول الله صلى الله عليه وسلم بثلاث سنين . قلت لمن قال لله . قلت فاين توجه قال اتوجه حيث يوجهني ربي اصلي عشاء حتى اذا كان من اخر الليل القيت كاني خفاء حتى تعلوني الشمس . فقال انيس ان لي حاجة بمكة فاكفني . فانطلق انيس حتى اتى مكة فراث على ثم جاء فقلت ما صنعت قال لقيت رجلا بمكة على دينك يزعم ان الله ارسله . قلت فما يقول الناس قال يقولون شاعر كاهن ساحر . وكان انيس احد الشعراء . قال انيس لقد سمعت قول الكهنة فما هو بقولهم ولقد وضعت قوله على اقراء الشعر فما يلتيم على لسان احد بعدي انه شعر والله انه لصادق وانهم لكاذبون . قال قلت فاكفني حتى اذهب فانظر . قال فاتيت مكة فتضعفت رجلا منهم فقلت اين هذا الذي تدعونه الصابي فاشار الى فقال الصابي . فمال على اهل الوادي بكل مدرة وعظم حتى خررت مغشيا على - قال - فارتفعت حين ارتفعت كاني نصب احمر - قال - فاتيت زمزم فغسلت عني الدماء وشربت من مايها ولقد لبثت يا ابن اخي ثلاثين بين ليلة ويوم ما كان لي طعام الا ماء زمزم فسمنت حتى تكسرت عكن بطني وما وجدت على كبدي سخفة جوع - قال - فبينا اهل مكة في ليلة قمراء اضحيان اذ ضرب على اسمختهم فما يطوف بالبيت احد وامراتين منهم تدعوان اسافا ونايلة - قال - فاتتا على في طوافهما فقلت انكحا احدهما الاخرى - قال - فما تناهتا عن قولهما - قال - فاتتا على فقلت هن مثل الخشبة غير اني لا اكني . فانطلقتا تولولان وتقولان لو كان ها هنا احد من انفارنا . قال فاستقبلهما رسول الله صلى الله عليه وسلم وابو بكر وهما هابطان قال " ما لكما " . قالتا الصابي بين الكعبة واستارها قال " ما قال لكما " . قالتا انه قال لنا كلمة تملا الفم . وجاء رسول الله صلى الله عليه وسلم حتى استلم الحجر وطاف بالبيت هو وصاحبه ثم صلى فلما قضى صلاته قال ابو ذر . فكنت انا اول من حياه بتحية الاسلام - قال - فقلت السلام عليك يا رسول الله . فقال " وعليك ورحمة الله " . ثم قال " من انت " . قال قلت من غفار - قال - فاهوى بيده فوضع اصابعه على جبهته فقلت في نفسي كره ان انتميت الى غفار . فذهبت اخذ بيده فقدعني صاحبه وكان اعلم به مني ثم رفع راسه ثم قال " متى كنت ها هنا " . قال قلت قد كنت ها هنا منذ ثلاثين بين ليلة ويوم قال " فمن كان يطعمك " . قال قلت ما كان لي طعام الا ماء زمزم . فسمنت حتى تكسرت عكن بطني وما اجد على كبدي سخفة جوع قال " انها مباركة انها طعام طعم " . فقال ابو بكر يا رسول الله ايذن لي في طعامه الليلة . فانطلق رسول الله صلى الله عليه وسلم وابو بكر وانطلقت معهما ففتح ابو بكر بابا فجعل يقبض لنا من زبيب الطايف وكان ذلك اول طعام اكلته بها ثم غبرت ما غبرت ثم اتيت رسول الله صلى الله عليه وسلم فقال " انه قد وجهت لي ارض ذات نخل لا اراها الا يثرب فهل انت مبلغ عني قومك عسى الله ان ينفعهم بك وياجرك فيهم " . فاتيت انيسا فقال ما صنعت قلت صنعت اني قد اسلمت وصدقت . قال ما بي رغبة عن دينك فاني قد اسلمت وصدقت . فاتينا امنا فقالت ما بي رغبة عن دينكما فاني قد اسلمت وصدقت . فاحتملنا حتى اتينا قومنا غفارا فاسلم نصفهم وكان يومهم ايماء بن رحضة الغفاري وكان سيدهم . وقال نصفهم اذا قدم رسول الله صلى الله عليه وسلم المدينة اسلمنا . فقدم رسول الله صلى الله عليه وسلم المدينة فاسلم نصفهم الباقي وجاءت اسلم فقالوا يا رسول الله اخوتنا نسلم على الذي اسلموا عليه . فاسلموا فقال رسول الله صلى الله عليه وسلم " غفار غفر الله لها واسلم سالمها الله
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6359
- Book Index
- 189
Grades
- -
