ஹதீஸ்கள்
#5692
ஸஹீஹ் முஸ்லிம் - Greetings
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்தபோதே) மணந்துகொண்டார். இந்தப் பூமியில் அவருக்கு அவரது குதிரையை(யும் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்குத்) தண்ணீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; தண்ணீர் இரைக்கும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங் கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத்தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத்தருவார்கள். அப்பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் (3.5 கி.மீ) தொலைவில் இருந்தது. ஒரு நாள் நான் பேரீச்சங் கொட்டைகளை என் தலைமீது சுமந்து வந்துகொண்டிருந்தேன். (வழியில்) நான், (என் சகோதரி ஆயிஷாவின் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொள்வதற்காக "இஃக், இஃக்" என்று சொல்லித் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால், நான் அவர்களது ஒட்டகத்தில் ஏறிக்கொள்ளவில்லை.) (நான் வீட்டுக்கு வந்து என் கணவர் ஸுபைர் (ரலி) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்துவிட்டு) "நான் வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்" என்று கூறினேன். அதற்கு என் கணவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிடப் பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது" என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும்பகுதியை நானே மேற்கொண்டுவந்தேன்.) இறுதியாக (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் (அடிமைப் பெண்) ஊழியரை அனுப்பிவைத்தார்கள். அந்த ஊழியர் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Greetings
- Hadith Index
- #5692
- Book Index
- 46
Grades
- -