ஹதீஸ்கள்
#4633
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "ஸிஃப்பீன்" போர் நாளில் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! (இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து யாரையும் நீங்கள் குற்றம் சாட்டாதீர்கள்; மாறாக,) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நாங்கள் ஹுதைபியா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது சரியானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். ஆனால், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்பாட்டில் முடிந்தது. (ஹுதைபியாவில் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை விதித்தபோதும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.) அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் (எதிரிகள்) அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கோபத்தை அடக்க முடியாமல் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)" என்று விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்" என்று கூறினார்கள். அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ("உமக்கு நாம் தெளிவான வெற்றியை அளித்துவிட்டோம்" என்று தொடங்கும்) "அல்ஃபத்ஹ்" எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (வெற்றிதான்)" என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் மனச்சாந்தியடைந்து திரும்பிச் சென்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الله بن نمير، ح وحدثنا ابن نمير، - وتقاربا في اللفظ - حدثنا ابي، حدثنا عبد العزيز بن سياه، حدثنا حبيب بن ابي ثابت، عن ابي وايل، قال قام سهل بن حنيف يوم صفين فقال ايها الناس اتهموا انفسكم لقد كنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الحديبية ولو نرى قتالا لقاتلنا وذلك في الصلح الذي كان بين رسول الله صلى الله عليه وسلم وبين المشركين فجاء عمر بن الخطاب فاتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله السنا على حق وهم على باطل قال " بلى " . قال اليس قتلانا في الجنة وقتلاهم في النار قال " بلى " . قال ففيم نعطي الدنية في ديننا ونرجع ولما يحكم الله بيننا وبينهم فقال " يا ابن الخطاب اني رسول الله ولن يضيعني الله ابدا " . قال فانطلق عمر فلم يصبر متغيظا فاتى ابا بكر فقال يا ابا بكر السنا على حق وهم على باطل قال بلى . قال اليس قتلانا في الجنة وقتلاهم في النار قال بلى . قال فعلام نعطي الدنية في ديننا ونرجع ولما يحكم الله بيننا وبينهم فقال يا ابن الخطاب انه رسول الله ولن يضيعه الله ابدا . قال فنزل القران على رسول الله صلى الله عليه وسلم بالفتح فارسل الى عمر فاقراه اياه فقال يا رسول الله اوفتح هو قال " نعم " . فطابت نفسه ورجع
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4633
- Book Index
- 115
Grades
- -
