ஹதீஸ்கள்
#4209
ஸஹீஹ் முஸ்லிம் - Wills
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது (நான் மக்காவிலிருந்த சமயம் எனக்கு ஏற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தனாகிய எனக்கு, என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் நோய் என்னைப் பீடித்துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகங்களைத் தர்மம் செய்துவிடட்டுமா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வேண்டாம்" என்றார்கள். நான், "அவ்வாறாயின், என் சொத்தில் பாதியைத் தர்மம் செய்யட்டுமா?" என்று கேட்டேன். அதற்கும் "வேண்டாம்" என்று சொன்ன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பாகம் (வேண்டுமானால் தர்மம் செய்யலாம்). மூன்றில் ஒரு பாகமேகூட அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விரும்பிச் செய்கின்ற தர்மம் எதுவாயினும் அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிரதிபலன் வழங்கப்படும். எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவுக்கும்கூட (உங்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படும்)"என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்கள் அனைவரும் மதீனாவுக்குச் சென்று விடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) என் தோழர்களைவிட்டுப் பின்தங்கியவனாக ஆகி விடுவேனா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் இங்கு இருந்தபோதிலும் அல்லாஹ்வின் உவப்பை நாடி நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும்" எனக் கூறிவிட்டு, "உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மையடைவதற்காகவும் வேறுசிலர் துன்பமடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்க வைக்கப்படலாம்" என்று கூறினார்கள். மேலும், "இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் அடிச்சுவடுகளின் வழியே (முந்திய இணை வைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே" எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்து விட்டதற்காக, "பாவம் சஅத் பின் கவ்லா! (அவர் மீண்டும் ஹிஜ்ரத் பூமிக்கே திரும்பிச் செல்ல விரும்பினார். ஆனால்,நடக்கவில்லை)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது. அதில், "என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்த அனுதாபம் இடம்பெறவில்லை. ஆயினும் அதில், "நான் எந்த மண்ணை விட்டு நாடு துறந்து சென்றேனோ அதே மண்ணிலேயே இறப்பதை வெறுத்தேன்" என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى التميمي، اخبرنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن عامر بن سعد، عن ابيه، قال عادني رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع من وجع اشفيت منه على الموت فقلت يا رسول الله بلغني ما ترى من الوجع وانا ذو مال ولا يرثني الا ابنة لي واحدة افاتصدق بثلثى مالي قال " لا " . قال قلت افاتصدق بشطره قال " لا الثلث والثلث كثير انك ان تذر ورثتك اغنياء خير من ان تذرهم عالة يتكففون الناس ولست تنفق نفقة تبتغي بها وجه الله الا اجرت بها حتى اللقمة تجعلها في في امراتك " . قال قلت يا رسول الله اخلف بعد اصحابي قال " انك لن تخلف فتعمل عملا تبتغي به وجه الله الا ازددت به درجة ورفعة ولعلك تخلف حتى ينفع بك اقوام ويضر بك اخرون اللهم امض لاصحابي هجرتهم ولا تردهم على اعقابهم لكن البايس سعد ابن خولة " . قال رثى له رسول الله صلى الله عليه وسلم من ان توفي بمكة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Wills
- Hadith Index
- #4209
- Book Index
- 6
Grades
- -
