ஹதீஸ்கள்
#3691
ஸஹீஹ் முஸ்லிம் - Divorce
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மாத காலம் தம் துணைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்து) தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கு மக்கள் (கவலையோடு) சிறு கற்களைத் தரையில் எறிந்து கொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்" என்று கூறிக்கொண்டிருந்தனர். - இது பர்தா பற்றிய சட்டம் அருளப்பெறுவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும்.- "அன்று என்ன நடந்தது என்பதை நான் அறிந்தே தீருவேன்" என்று (எனக்குள்) நான் கூறிக்கொண்டேன். பிறகு நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உங்களது தகுதி உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? (முதலில்) நீங்கள் உங்களது பெட்டகத்தை (வீட்டை)க் கவனியுங்கள் (உங்கள் புதல்வி ஹஃப்ஸாவிற்கு அறிவுரை கூறுங்கள்)" என்று கூறினார்கள். ஆகவே, நான் (என் புதல்வி)ஹஃப்ஸா பின்த் உமரிடம் சென்று, "ஹஃப்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ இவ்வாறு செய்தால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நேசிக்கமாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால், உன்னை அவர்கள் மணவிலக்குச் செய்திருப்பார்கள்" என்று கூறினேன். இதைக் கேட்டு ஹஃப்ஸா கடுமையாக அழுதார். நான் ஹஃப்ஸாவிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இப்போது) எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, "மாடியிலுள்ள அவர்களது தனி அறையில் அவர்கள் இருக்கிறார்கள்" என்றார்கள். உடனே நான் அங்கு சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடியறையின் வாசற்படியில், செதுக்கப்பட்ட மரக்கட்டையின் மீது கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் பயன்படுத்திய பேரீச்ச மரக்கட்டையாகும். நான் (அவரைக்) கூப்பிட்டு, "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்" என்றேன். அப்போது ரபாஹ் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த) அந்த அறையை உற்றுப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்ல வில்லை. பின்னர் (மீண்டும்) நான், "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்" என்றேன். ரபாஹ் அந்த அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி, "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸா வுக்(குப் பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகளின் கழுத்தை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டால் கூட நிச்சயமாக அவரது கழுத்தை வெட்டி விடுவேன்" என்று உரத்த குரலில் சொன்னேன். அப்போது ரபாஹ் என்னை ஏறிவரச் சொல்லி சைகை செய்தார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. (இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காண வில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன். அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் (நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஏனெனில்,) தங்களுடன் (தங்களுக்கு உதவி புரிவதற்கு) அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்" என்று சொன்னேன். நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் -நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன்- நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது "உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்" (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், "அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்" (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன. அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களும் (என் புதல்வி) ஹஃப்ஸாவுமே நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரை மிகைத்தவர்களாக இருந்தனர். ஆகவே, நான், "அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் துணைவியரான) இவர்களை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) முஸ்லிம்கள் சிறு கற்களைத் தரையில் எறிந்துகொண்டு (ஆழ்ந்த கவலையுடன்) இருந்தனர்; "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்" என்று கூறிக்கொண்டுமிருந்தனர். நான் இங்கிருந்து இறங்கிச்சென்று, "தாங்கள் தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை என அவர்களிடம் தெரிவித்துவிடவா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நீங்கள் விரும்பினால் (அவ்வாறு செய்யுங்கள்)" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்திலிருந்து கோபம் விலகும் வரையிலும், பற்கள் தெரியுமளவிற்கு அவர்கள் சிரிக்கும்வரையிலும் அவர்களிடம் நான் பேசிக்கொண்டேயிருந்தேன். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அழகான பற்கள் உடையவராக இருந்தார்கள்.- பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மாடியறையிலிருந்து) இறங்கினார்கள். நானும் இறங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்ச மரக்கட்டையைத் தமது கரத்தால் பற்றாமலேயே தரையில் நடப்பதைப் போன்று (சாதாரணமாக) நடந்தார்கள். (ஆனால்,) நான் அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டே இறங்கினேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த அறையில் இருபத்தொன்பது நாட்கள் மட்டுமே தங்கியுள்ளீர்கள் (ஆனால், ஒரு மாதம் மனைவியரிடமிருந்து விலகியிருக்கப்போவதாக சத்தியம் செய்திருந்தீர்களே?)!"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள். பின்னர் நான் பள்ளிவாசலின் தலைவாயிலில் நின்றுகொண்டு உரத்த குரலில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை" என்று கூறினேன். அப்போது, "பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை அவர்கள் (உடனே) பரப்பிவிடுகின்றனர். அதை இறைத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டுசென்றிருந்தால் அதை ஆய்வு செய்வோர் அறிந்துகொண்டிருப்பர்" (4:83) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது. நானே அச்செய்தியை ஆய்வு செய்தவனாக இருந்தேன். ஆக, மனைவியருக்கு விருப்ப உரிமை அளிப்பது தொடர்பான (33:28ஆவது) வசனத்தை, வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Divorce
- Hadith Index
- #3691
- Book Index
- 40
Grades
- -