ஹதீஸ்கள்
#3487
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ளுமாறு கோரி) வந்துள்ளேன்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்" என்றார்கள். அவர் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். "இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது; அதில் பாதி அவளுக்கு" என்று சொன்னார். -அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை. (அதனால்தான் தனது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.)- அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது (ஒரு) வேட்டியை வைத்துக் கொண்டு நீர் என்ன செய்வீர்? இந்த வேட்டியை நீர் அணிந்துகொண்டால், அவள்மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்துகொண்டால், உம்மீது ஏதும் இருக்காது" என்றார்கள், பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச்செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது, அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் அழைக்கப்பட்டார். அவர் வந்தபோது, "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?" என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد الثقفي، حدثنا يعقوب، - يعني ابن عبد الرحمن القاري - عن ابي حازم، عن سهل بن سعد، ح وحدثناه قتيبة، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل بن سعد، الساعدي قال جاءت امراة الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله جيت اهب لك نفسي . فنظر اليها رسول الله صلى الله عليه وسلم فصعد النظر فيها وصوبه ثم طاطا رسول الله صلى الله عليه وسلم راسه فلما رات المراة انه لم يقض فيها شييا جلست فقام رجل من اصحابه فقال يا رسول الله ان لم يكن لك بها حاجة فزوجنيها . فقال " فهل عندك من شىء " . فقال لا والله يا رسول الله . فقال " اذهب الى اهلك فانظر هل تجد شييا " . فذهب ثم رجع فقال لا والله ما وجدت شييا . فقال رسول الله صلى الله عليه وسلم " انظر ولو خاتما من حديد " . فذهب ثم رجع . فقال لا والله يا رسول الله ولا خاتما من حديد . ولكن هذا ازاري - قال سهل ما له رداء - فلها نصفه . فقال رسول الله صلى الله عليه وسلم " ما تصنع بازارك ان لبسته لم يكن عليها منه شىء وان لبسته لم يكن عليك منه شىء " . فجلس الرجل حتى اذا طال مجلسه قام فراه رسول الله صلى الله عليه وسلم موليا فامر به فدعي فلما جاء قال " ماذا معك من القران " . قال معي سورة كذا وسورة كذا - عددها . فقال " تقروهن عن ظهر قلبك " . قال نعم . قال " اذهب فقد ملكتكها بما معك من القران " . هذا حديث ابن ابي حازم وحديث يعقوب يقاربه في اللفظ
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3487
- Book Index
- 89
Grades
- -
