ஹதீஸ்கள்
#7190
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ அம்ர் (பின் அவ்ஃப்) குலத்தாரி டையே மோதல் ஏற்பட்டிருந்த விவரம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது லுஹ்ருத் தொழுகை தொழுவித்துவிட்டு அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகச் சென்றார்கள். இதற்கிடையே அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிடவே பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். பிறகு இகாமத் சொல்லிவிட்டு (நபியவர்கள் வெளியே சென்றுவிட்டதால்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நடத்துமாறு) கூறினார்கள். எனவே, அபூபக்ர் (தொழுகை நடத்த) முன்நின்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் (இமாமாக) இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்துவிட்டார்கள். (தொழுகை அணிகளை) விலக்கிக்கொண்டு வந்து (இமாமாக நின்று தொழுவித்துக்கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலுள்ள (முதல்) அணியில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக) கைதட்டினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழத் தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை திரும்பிப் பார்க்கவேமாட்டார்கள். ஆனால், மக்கள் நிறுத்தாமல் கைதட்டிக் கொண்டிருக்கக் கண்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னால் நபி (ஸல்) அவர் களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) அங்கேயே நின்று தொழுகையைத் தொடருமாறு (தமது கையால்) சைகை செய்தார்கள். இதோ இவ்வாறுதான் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கேயே சிறிது நேரம் இருந்து, நபி (ஸல்) அவர்கள் (தம்மைத் தொழுவிக்குமாறு) கூறியமைக்காக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு திரும்பாமல் அப்படியே பின்னோக்கி (முதல் அணிக்கு) நடந்தார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடிந்ததும், “அபூபக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தும் நீங்கள் தொழுகையைத் தொடராமல் இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்களுக்கே தலைமை தாங்கித் தொழுகை நடத்தும் தகுதி அபூகுஹாஃபாவின் மகனுக்கு (எனக்கு) இல்லை” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், “(தொழுகையில்) உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமானால் ஆண்களாயிருந்தால், அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லட்டும். பெண்களாயிருந்தால், (இமாமின் கவனத்தை ஈர்ப்பதற்காகக்) கைதட்டட்டும்!” என்று சொன்னார்கள்.57 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7190
- Book Index
- 52
Grades
- -