ஹதீஸ்கள்
#6679
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:) அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறியபின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்- அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள்.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6679
- Book Index
- 56
Grades
- -