ஹதீஸ்கள்
#6073
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் பின் மாலிக் பின் துஃபைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர் பாக’ (அவர்களுடைய சகோதரி அஸ்மா வின் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (அதிருப்தி யடைந்து) “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தமது முடிவைக்) கைவிட வேண்டும்; அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்” என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவரா இப்படிச் சொன்னார்?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன்; என் சத்தியத்தை நான் முறித்துக்கொள்ளவுமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும் நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அழைத்துச்செல்லக் கூடாதா? என் உறவை முறித்துக்கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!” என்று கூறினார்கள். ஆகவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு, இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே ‘அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு’ என்று சலாம் சொல்லிவிட்டு, “நாங்கள் உள்ளே வரலாமா?” என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “உள்ளே வாருங்கள்” என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) “நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?” என்று கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்” என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இருப்பதை அறிந்துகொள்ளாமலேயே கூறினார்கள். அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பேசியே தீர வேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், “ ‘ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று’ என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும், (உறவை முறிப்பதன் பாவம் குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் அழலானார்கள். மேலும், “(நான் அவரிடம் பேச மாட்டேன் எனச்) சத்தியம் செய்துவிட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்” என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பத் திரும்பக்) கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷாவிடம் அவர்கள் இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தமது சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும்கூடத் தமது சத்தியத்தை நினைவுகூர்ந்து தமது முகத்திரை நனையுமளவுக்கு அவர்கள் அழுவார்கள்.87 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني عوف بن مالك بن الطفيل هو ابن الحارث وهو ابن اخي عايشة زوج النبي صلى الله عليه وسلم لامها ان عايشة حدثت ان عبد الله بن الزبير قال في بيع او عطاء اعطته عايشة والله لتنتهين عايشة، او لاحجرن عليها. فقالت اهو قال هذا قالوا نعم. قالت هو لله على نذر، ان لا اكلم ابن الزبير ابدا. فاستشفع ابن الزبير اليها، حين طالت الهجرة فقالت لا والله لا اشفع فيه ابدا، ولا اتحنث الى نذري. فلما طال ذلك على ابن الزبير كلم المسور بن مخرمة وعبد الرحمن بن الاسود بن عبد يغوث، وهما من بني زهرة، وقال لهما انشدكما بالله لما ادخلتماني على عايشة، فانها لا يحل لها ان تنذر قطيعتي. فاقبل به المسور وعبد الرحمن مشتملين بارديتهما حتى استاذنا على عايشة فقالا السلام عليك ورحمة الله وبركاته، اندخل قالت عايشة ادخلوا. قالوا كلنا قالت نعم ادخلوا كلكم. ولا تعلم ان معهما ابن الزبير، فلما دخلوا دخل ابن الزبير الحجاب، فاعتنق عايشة وطفق يناشدها ويبكي، وطفق المسور وعبد الرحمن يناشدانها الا ما كلمته وقبلت منه، ويقولان ان النبي صلى الله عليه وسلم نهى عما قد علمت من الهجرة، فانه لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث ليال. فلما اكثروا على عايشة من التذكرة والتحريج طفقت تذكرهما نذرها وتبكي وتقول اني نذرت، والنذر شديد. فلم يزالا بها حتى كلمت ابن الزبير، واعتقت في نذرها ذلك اربعين رقبة. وكانت تذكر نذرها بعد ذلك فتبكي، حتى تبل دموعها خمارها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6073
- Book Index
- 103
Grades
- -
