ஹதீஸ்கள்
#5974
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில்) மூன்றுபேர் நடந்து சென்றுகொண்டி ருந்தபோது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் (ஒதுங்கு வதற்காக) ஒரு மலைக்குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகைவாயிலை அடைத்துக்கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், “நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப்பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இ(ப்பாறை)தனை (நம்மைவிட்டு) அகற்றிவிடக்கூடும்” என்று பேசிக்கொண்டனர். எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்: இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்துகொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒருநாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய், தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும்போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்று கொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பசியால்) கதறிக்கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம். அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள். இரண்டாமவர் (பின்வருமாறு) வேண்டினார்: இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒருநாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறத்துவிட்டாள். நான் முயற்சி செய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள், “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சு! முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறக்காதே” என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் அன்பைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக! அவ்வாறே (அல்லாஹ்), அவர்களுக்கு (அப்பாறையை இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான். மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்: இறைவா! நான் ஒரு ‘ஃபரக்’ அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவு டன், “என்னுடைய உரிமையை (கூலியை)க் கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரது உரிமையை (கூலியை) அவர்முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்(டுச் சென்றுவிட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வை அஞ்சுவீராக! எனக்கு அநீதி இழைக்காதீர்! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடுவீராக!” என்று கூறினார். அதற்கு நான், “அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)” என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! என்னைப் பரிகாசம் செய்யாதீர்!” என்று சொன்னார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்” என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார். (இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் அன்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக! அவ்வாறே அல்லாஹ் (அப்பாறையை) அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.5 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا اسماعيل بن ابراهيم بن عقبة، قال اخبرني نافع، عن ابن عمر رضى الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال " بينما ثلاثة نفر يتماشون اخذهم المطر، فمالوا الى غار في الجبل، فانحطت على فم غارهم صخرة من الجبل، فاطبقت عليهم، فقال بعضهم لبعض انظروا اعمالا عملتموها لله صالحة، فادعوا الله بها لعله يفرجها. فقال احدهم اللهم انه كان لي والدان شيخان كبيران، ولي صبية صغار كنت ارعى عليهم، فاذا رحت عليهم فحلبت بدات بوالدى اسقيهما قبل ولدي، وانه ناء بي الشجر فما اتيت حتى امسيت، فوجدتهما قد ناما، فحلبت كما كنت احلب، فجيت بالحلاب فقمت عند رءوسهما، اكره ان اوقظهما من نومهما، واكره ان ابدا بالصبية قبلهما، والصبية يتضاغون عند قدمى، فلم يزل ذلك دابي ودابهم حتى طلع الفجر، فان كنت تعلم اني فعلت ذلك ابتغاء وجهك، فافرج لنا فرجة نرى منها السماء، ففرج الله لهم فرجة حتى يرون منها السماء. وقال الثاني اللهم انه كانت لي ابنة عم، احبها كاشد ما يحب الرجال النساء، فطلبت اليها نفسها، فابت حتى اتيها بماية دينار، فسعيت حتى جمعت ماية دينار، فلقيتها بها، فلما قعدت بين رجليها قالت يا عبد الله اتق الله، ولا تفتح الخاتم. فقمت عنها، اللهم فان كنت تعلم اني قد فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا منها ففرج لهم فرجة. وقال الاخر اللهم اني كنت استاجرت اجيرا بفرق ارز فلما قضى عمله قال اعطني حقي. فعرضت عليه حقه، فتركه ورغب عنه، فلم ازل ازرعه حتى جمعت منه بقرا وراعيها، فجاءني فقال اتق الله ولا تظلمني، واعطني حقي. فقلت اذهب الى ذلك البقر وراعيها. فقال اتق الله ولا تهزا بي. فقلت اني لا اهزا بك، فخذ ذلك البقر وراعيها. فاخذه فانطلق بها، فان كنت تعلم اني فعلت ذلك ابتغاء وجهك، فافرج ما بقي، ففرج الله عنهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #5974
- Book Index
- 5
Grades
- -
