ஹதீஸ்கள்
#5191
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), ‘‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப் புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” (66:4) என்று கூறியிருந்தான். (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) அவர்கள் (தமது இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் தண்ணீர்க் குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக்கடனை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் அங்கத்தூய்மை செய்தார்கள். அப்போது நான் அன்னாரிடம், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்). ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்துவிட்டிருக்கின்றன’ என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (உங்களுக்குமா இது தெரியாமற்போயிற்று!) ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும்தான் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது: நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாருடன் வசித்துவந்தேன். இவர்கள் மதீனாவின் மேடான பகுதிகளில் ஒன்றில் குடியிருப்பவர்களாவர். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுடன் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒருநாள் நபியவர்களுடன் இருப்பேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை நான் அவரிடம் வந்து தெரிவிப்பேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தால் இதைப் போன்றே அவரும் செய்வார். குறைஷி குலத்தாராகிய நாங்கள் (மக்காவிலிருந்தபோது) பெண்களை மிஞ்சிவிடுபவர்களாக இருந்துவந்தோம். (பெண்களை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக்கூடியவர்களாக இருந்தனர். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்து பவர்களாக, தம்முடைய மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக்கூடியவர்களாக இருந்தனர்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைக் கையாளத் தொடங்கினர். (ஒருநாள்) நான் என் மனைவி (ஸைனப் பின்த் மழ்ஊன்) இடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். உடனே என் மனைவியும் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அதற்கு அவர், ‘‘நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (அன்னாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினார். இது என்னை அதிர்ச்சி அடையச் செய்யவே, ‘‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகி விட்டார்” என்று என் மனைவியிடம் கூறினேன். பிறகு உடை அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி, (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவராயிருந்த என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘‘ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘‘ஆம்” என்று பதிலளித்தார். நான், ‘‘அப்படியானால், நீ நஷ்டப்பட்டு விட்டாய்; இழப்புக்குள்ளாகிவிட்டாய். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து நீ அழிந்துபோய்விடுவாய் எனும் அச்சம் உனக்கில்லையா? நபி (ஸல்) அவர்களிடம் அதிகமாக(த் தேவைகளை)க் கேட்காதே. எதற்காகவும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் -ஆயிஷா- உன்னைவிட அழகு மிக்கவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்துபோய் (அவரைப்போல் நடந்து கொண்டு)விடாதே” என்று நான் (என் மகளுக்குப் புத்திமதி) கூறினேன். அந்தக் காலகட்டத்தில், (ஷாம் நாட்டில் வாழும்) ‘ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள்மீது போர் தொடுப்பதற்காக, (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று நாங்கள் ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். (இவ்வாறிருக்க ஒருநாள்) என் அன்சாரித் தோழர் தமது முறைக்குரிய நாளில் (எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை மிக பலமாகத் தட்டினார். (கதவைத் திறக்க நான் சற்று தாமதித்தபோது) ‘‘அவர் (உமர்) இங்கே இருக்கிறாரா(?அல்லது வெளியில் சென்றுவிட்டாரா)?” என்று கேட்டார். (வழக்கத்திற்கு மாறாக அவர் கதவைத் தட்டியதால்) நான் கலக்கமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘‘இன்று மிகப் பெரிய சம்பவ மொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘‘என்ன அது? ஃகஸ்ஸான் குலத்தார் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். ‘‘இல்லை. அதைவிடப் பெரிய, அதைவிட அதிர்ச்சியான சம்பவம் நடந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்!” என்று கூறினார். நான், ‘‘(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டார். நான் இப்படி (கூடிய விரைவில்) நடக்கத் தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்” எனக் கூறிவிட்டு, உடை அணிந்து கொண்டு புறப்பட்டேன். நபி (ஸல்) அவர் களுடன் ஃபஜ்ர் தொழுகை தொழுதேன். (தொழுகை முடிந்த) உடனே நபி (ஸல்) அவர்கள் தமக்குரிய மாடியறைக்குச் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார். நான், ‘‘ஏன் அழுகிறாய்? இது குறித்து உன்னை நான் எச்சரித்திருக்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘எனக்கு (ஒன்றும்) தெரியாது. அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார்கள்” என்று கூறினார். உடனே நான் (அங்கிருந்து) புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தார் இருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் துக்கம் தாளாமல் நபியவர்கள் இருந்த மாடி அறைக்கு அருகே வந்தேன். (அங்கிருந்த) நபி (ஸல்) அவர்களுடைய கறுப்பு அடிமை (ரபாஹ் அவர்கள்) இடம், ‘‘உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன் னேன். அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி விட்டுப் பிறகு வெளியே வந்து, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் பேசினேன். உங்களைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். ஆகவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கு அருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மீண்டும்) அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று (முன் போலவே) சொன்னார். நான் (மறுபடியும்) திரும்பிவந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மூன்றாம் முறையாக) அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்!” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் திரும்பி வந்து, ‘‘நான் உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்”என்று கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘‘உங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்” என்று கூறினார். உடனே நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. ஆகவே, அவர்களது விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். பிறகு நான் நின்றுகொண்டே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைத் தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். நபியவர்கள் தமது பார்வையை என்னை நோக்கி உயர்த்தி, ‘‘இல்லை (மணவிலக்குச் செய்யவில்லை)” என்று கூறினார்கள். உடனே நான் ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன். (அவர்களது கோபத்தைக் குறைத்து) அவர்களைச் சாந்தப்படுத்த விரும்பி, நின்றபடியே (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்! குறைஷி குலத்தாராகிய நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது பெண்கள் ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரைக் கண்டோம். (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டனர்)” என்று சொன்னேன். (அதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கூறுவதைச் சற்று கேளுங்கள்! நான் ஹஃப்ஸாவிடம் சென்று, ‘உன் அண்டை வீட்டுக்காரர் -ஆயிஷா- உன்னைவிட அழகானவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துபோய் (அவரைப்போல நடந்து கொண்டு)விடாதே’ என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் (அங்கு) அமர்ந்துகொண்டேன். பிறகு, நான் எனது பார்வையை உயர்த்தி அவர்களின் அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற பொருள் எதையும் நான் அவர்களின் அறையில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், ‘‘தங்கள் சமுதாயத்தாருக்கு (உலகச் செல்வங்களை) தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் (கிழக்கு) ரோமர்களுக்கும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர் களாக இருந்தும்- உலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். (தலையணையில்) சாய்ந்து அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டவுடன்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, ‘‘கத்தாபின் புதல்வரே! நீங்கள் இன்னும் இந்த எண்ணத்தில்தான் இருக்கிறீர்களா? அவர்களின் (நற்செயல்களுக்கான) பிரதிபலன்கள் அனைத்தும் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டு இப்படிக் கேட்ட) எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா, ஆயிஷா அவர்களிடம் கூறி வெளிப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, இருபத்தொன்பது நாட்கள் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (66:1ஆவது வசனத்தின் மூலம்) கண்டித்தபோது தம் துணைவியர்மீது ஏற்பட்ட கடும் வருத்தத்தின் காரணத்தால் ‘‘(என் துணைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்லமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்கள். இருபத்தொன்பது நாட்கள் கழிந்து விட்டபோது, நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அதற்குப்பின் மற்றத் துணைவியரிடம் சென்றார்கள்.) அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பது இரவுகளைத்தானே கழித்திருக்கின்றீர்கள்! (ஒருநாள் முன்னதாக வந்துவிட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகின்றேனே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மாதம் என்பது (குறைந்தபட்சம்) இருபத்தொன்பது நாட்களும்தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாட்களாகவே இருந்தது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு, அவர்கள் விரும்பினால் நபியுடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடும் (33:28 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு) தம் துணைவியரில் முதலாவதாக என்னிடமே (கூறத்) தொடங்கினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை(ச் சேர்ந்து வாழும் வாழ்க்கையை)யே தேர்ந்தெடுத் தேன். பிறகு தம் துணைவியர் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் இதே உரிமையை வழங்கினார்கள். துணைவியர் அனைவரும் நான் சொன்னதைப் போன்றே சொல்லிவிட்டார்கள்.127 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عبيد الله بن عبد الله بن ابي ثور، عن عبد الله بن عباس رضى الله عنهما قال لم ازل حريصا ان اسال عمر بن الخطاب عن المراتين من ازواج النبي صلى الله عليه وسلم اللتين قال الله تعالى {ان تتوبا الى الله فقد صغت قلوبكما} حتى حج وحججت معه، وعدل وعدلت معه باداوة، فتبرز، ثم جاء فسكبت على يديه منها فتوضا فقلت له يا امير المومنين من المراتان من ازواج النبي صلى الله عليه وسلم اللتان قال الله تعالى {ان تتوبا الى الله فقد صغت قلوبكما} قال واعجبا لك يا ابن عباس، هما عايشة وحفصة. ثم استقبل عمر الحديث يسوقه قال كنت انا وجار لي من الانصار في بني امية بن زيد، وهم من عوالي المدينة، وكنا نتناوب النزول على النبي صلى الله عليه وسلم فينزل يوما وانزل يوما، فاذا نزلت جيته بما حدث من خبر ذلك اليوم من الوحى او غيره، واذا نزل فعل مثل ذلك، وكنا معشر قريش نغلب النساء، فلما قدمنا على الانصار اذا قوم تغلبهم نساوهم، فطفق نساونا ياخذن من ادب نساء الانصار، فصخبت على امراتي فراجعتني فانكرت ان تراجعني قالت ولم تنكر ان اراجعك فوالله ان ازواج النبي صلى الله عليه وسلم ليراجعنه، وان احداهن لتهجره اليوم حتى الليل. فافزعني ذلك وقلت لها وقد خاب من فعل ذلك منهن. ثم جمعت على ثيابي فنزلت فدخلت على حفصة فقلت لها اى حفصة اتغاضب احداكن النبي صلى الله عليه وسلم اليوم حتى الليل قالت نعم. فقلت قد خبت وخسرت، افتامنين ان يغضب الله لغضب رسوله صلى الله عليه وسلم فتهلكي لا تستكثري النبي صلى الله عليه وسلم ولا تراجعيه في شىء، ولا تهجريه، وسليني ما بدا لك، ولا يغرنك ان كانت جارتك اوضا منك، واحب الى النبي صلى الله عليه وسلم يريد عايشة قال عمر وكنا قد تحدثنا ان غسان تنعل الخيل لغزونا، فنزل صاحبي الانصاري يوم نوبته، فرجع الينا عشاء فضرب بابي ضربا شديدا وقال اثم هو ففزعت فخرجت اليه، فقال قد حدث اليوم امر عظيم. قلت ما هو، اجاء غسان قال لا بل اعظم من ذلك واهول، طلق النبي صلى الله عليه وسلم نساءه. فقلت خابت حفصة وخسرت، قد كنت اظن هذا يوشك ان يكون، فجمعت على ثيابي فصليت صلاة الفجر مع النبي صلى الله عليه وسلم فدخل النبي صلى الله عليه وسلم مشربة له، فاعتزل فيها، ودخلت على حفصة فاذا هي تبكي فقلت ما يبكيك الم اكن حذرتك هذا اطلقكن النبي صلى الله عليه وسلم قالت لا ادري ها هو ذا معتزل في المشربة. فخرجت فجيت الى المنبر فاذا حوله رهط يبكي بعضهم، فجلست معهم قليلا ثم غلبني ما اجد، فجيت المشربة التي فيها النبي صلى الله عليه وسلم فقلت لغلام له اسود استاذن لعمر. فدخل الغلام فكلم النبي صلى الله عليه وسلم ثم رجع فقال كلمت النبي صلى الله عليه وسلم وذكرتك له، فصمت. فانصرفت حتى جلست مع الرهط الذين عند المنبر، ثم غلبني ما اجد فجيت فقلت للغلام استاذن لعمر. فدخل ثم رجع فقال قد ذكرتك له فصمت. فرجعت فجلست مع الرهط الذين عند المنبر، ثم غلبني ما اجد فجيت الغلام فقلت استاذن لعمر. فدخل ثم رجع الى فقال قد ذكرتك له فصمت. فلما وليت منصرفا قال اذا الغلام يدعوني فقال قد اذن لك النبي صلى الله عليه وسلم فدخلت على رسول الله صلى الله عليه وسلم فاذا هو مضطجع على رمال حصير، ليس بينه وبينه فراش، قد اثر الرمال بجنبه متكيا على وسادة من ادم حشوها ليف، فسلمت عليه ثم قلت وانا قايم يا رسول الله اطلقت نساءك. فرفع الى بصره فقال " لا ". فقلت الله اكبر. ثم قلت وانا قايم استانس يا رسول الله لو رايتني، وكنا معشر قريش نغلب النساء فلما قدمنا المدينة اذا قوم تغلبهم نساوهم، فتبسم النبي صلى الله عليه وسلم ثم قلت يا رسول الله لو رايتني ودخلت على حفصة فقلت لها لا يغرنك ان كانت جارتك اوضا منك واحب الى النبي صلى الله عليه وسلم يريد عايشة فتبسم النبي صلى الله عليه وسلم تبسمة اخرى، فجلست حين رايته تبسم، فرفعت بصري في بيته، فوالله ما رايت في بيته شييا يرد البصر غير اهبة ثلاثة، فقلت يا رسول الله ادع الله فليوسع على امتك، فان فارسا والروم قد وسع عليهم، واعطوا الدنيا وهم لا يعبدون الله. فجلس النبي صلى الله عليه وسلم وكان متكيا. فقال " اوفي هذا انت يا ابن الخطاب، ان اوليك قوم عجلوا طيباتهم في الحياة الدنيا ". فقلت يا رسول الله استغفر لي. فاعتزل النبي صلى الله عليه وسلم نساءه من اجل ذلك الحديث حين افشته حفصة الى عايشة تسعا وعشرين ليلة وكان قال " ما انا بداخل عليهن شهرا ". من شدة موجدته عليهن حين عاتبه الله، فلما مضت تسع وعشرون ليلة دخل على عايشة فبدا بها فقالت له عايشة يا رسول الله انك كنت قد اقسمت ان لا تدخل علينا شهرا، وانما اصبحت من تسع وعشرين ليلة اعدها عدا. فقال " الشهر تسع وعشرون ". فكان ذلك الشهر تسعا وعشرين ليلة. قالت عايشة ثم انزل الله تعالى اية التخير فبدا بي اول امراة من نسايه فاخترته، ثم خير نساءه كلهن فقلن مثل ما قالت عايشة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5191
- Book Index
- 125
Grades
- -
