ஹதீஸ்கள்
#5087
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி தம் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள். தமது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) ‘‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவர் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்)பார்!” என்றார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது கீழங்கிதான் உள்ளது” என்றார். -அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது கீழங்கியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.- அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? அந்த கீழங்கியை நீ உடுத்திக்கொண்டால் அவள் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உன்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?)” என்று கேட்டார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது அவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘(குர்ஆனில்) இன்ன இன்ன அத்தியாயங்கள் என்னுடன் உள்ளன” என்று எண்ணி எண்ணிச் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அவற்றை நீ மனப்பாடமாக ஓதுவாயா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5087
- Book Index
- 25
Grades
- -