ஹதீஸ்கள்
#4913
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றுக்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தான் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள்.3 உடனே நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் உங்கள்மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை” என்று சொன்னேன். அப்போது, ‘‘(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தைஅல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.) (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தபோது என் மனைவி, ‘‘நீங்கள் இப்படிச் செய்யலாமே” என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள்” என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘‘என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு” என்றார். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்துவிடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.4 இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, ‘‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டுவந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவுக்கு வந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி (கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலகட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒருநாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘‘திறங்கள், திறங்கள்” என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான், ‘‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகிவிட்டார்கள்” என்றார். உடனே நான், ‘‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து)கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், ‘‘இந்த உமர் பின் அல்கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (கிழக்கு ரோமானிய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.5 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا سليمان بن بلال، عن يحيى، عن عبيد بن حنين، انه سمع ابن عباس رضى الله عنهما يحدث انه قال مكثت سنة اريد ان اسال عمر بن الخطاب عن اية، فما استطيع ان اساله هيبة له، حتى خرج حاجا فخرجت معه فلما رجعت وكنا ببعض الطريق عدل الى الاراك لحاجة له قال فوقفت له حتى فرغ سرت معه فقلت يا امير المومنين من اللتان تظاهرت�� على النبي صلى الله عليه وسلم من ازواجه فقال تلك حفصة وعايشة. قال فقلت والله ان كنت لاريد ان اسالك عن هذا منذ سنة، فما استطيع هيبة لك. قال فلا تفعل ما ظننت ان عندي من علم فاسالني، فان كان لي علم خبرتك به قال ثم قال عمر والله ان كنا في الجاهلية ما نعد للنساء امرا، حتى انزل الله فيهن ما انزل وقسم لهن ما قسم قال فبينا انا في امر اتامره اذ قالت امراتي لو صنعت كذا وكذا قال فقلت لها مالك ولما ها هنا فيما تكلفك في امر اريده. فقالت لي عجبا لك يا ابن الخطاب ما تريد ان تراجع انت، وان ابنتك لتراجع رسول الله صلى الله عليه وسلم حتى يظل يومه غضبان. فقام عمر فاخذ رداءه مكانه حتى دخل على حفصة فقال لها يا بنية انك لتراجعين رسول الله صلى الله عليه وسلم حتى يظل يومه غضبان. فقالت حفصة والله انا لنراجعه. فقلت. تعلمين اني احذرك عقوبة الله وغضب رسوله صلى الله عليه وسلم يا بنية لا يغرنك هذه التي اعجبها حسنها حب رسول الله صلى الله عليه وسلم اياها يريد عايشة قال ثم خرجت حتى دخلت على ام سلمة لقرابتي منها فكلمتها. فقالت ام سلمة عجبا لك يا ابن الخطاب دخلت في كل شىء، حتى تبتغي ان تدخل بين رسول الله صلى الله عليه وسلم وازواجه. فاخذتني والله اخذا كسرتني عن بعض ما كنت اجد، فخرجت من عندها، وكان لي صاحب من الانصار اذا غبت اتاني بالخبر، واذا غاب كنت انا اتيه بالخبر، ونحن نتخوف ملكا من ملوك غسان، ذكر لنا انه يريد ان يسير الينا، فقد امتلات صدورنا منه، فاذا صاحبي الانصاري يدق الباب فقال افتح افتح. فقلت جاء الغساني فقال بل اشد من ذلك. اعتزل رسول الله صلى الله عليه وسلم ازواجه. فقلت رغم انف حفصة وعايشة. فاخذت ثوبي فاخرج حتى جيت فاذا رسول الله صلى الله عليه وسلم في مشربة له يرقى عليها بعجلة، وغلام لرسول الله صلى الله عليه وسلم اسود على راس الدرجة فقلت له قل هذا عمر بن الخطاب. فاذن لي قال عمر فقصصت على رسول الله صلى الله عليه وسلم هذا الحديث، فلما بلغت حديث ام سلمة تبسم رسول الله صلى الله عليه وسلم وانه لعلى حصير ما بينه وبينه شىء، وتحت راسه وسادة من ادم حشوها ليف، وان عند رجليه قرظا مصبوبا، وعند راسه اهب معلقة فرايت اثر الحصير في جنبه فبكيت فقال " ما يبكيك ". فقلت يا رسول الله ان كسرى وقيصر فيما هما فيه وانت رسول الله. فقال " اما ترضى ان تكون لهم الدنيا ولنا الاخرة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4913
- Book Index
- 433
Grades
- -
