ஹதீஸ்கள்
#4726
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்துகொண்டிருந்த போது அவர்கள், ‘‘என்னிடம் (ஏதேனும் விளக்கம் கேட்க நினைத்தால்) கேளுங்கள்!” என்றார்கள். நான், ‘‘அபூஅப்பாஸ்6 அவர்களே!- அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!- (இராக்கிலுள்ள) ‘கூஃபா’ நகரில் கதை சொல்லும் மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ‘நவ்ஃப்’ என்று சொல்லப்படும். அவர், (களிர் (அலை) அவர்களின் சமகாலத்தவரான) மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர் (அவர் வேறொரு மூசாதான்)’ எனக் கூறுகிறார்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்துள்ளார்கள்: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் மூசா (அலை) அவர்கள் (தம் சமுதாய) மக்களுக்கு, (இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை) நினைவூட்டிக் கண்கள் ததும்ப இதயங்கள் நெகிழ்ந்துருகும் அளவுக்கு உபதேசித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து சேர்ந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் உங்களைவிட அறிந்தவர் எவரேனும் உண்டா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, மூசா (அலை) அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” எனப் பதிலளிக்காமல் விட்டுவிட்டார்கள். எனவே, மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. (உம்மைவிட அறிந்தவர் ஒருவர் பூமியில் இருக்கிறார்)” என்று (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) சொல்லப்பட்டது. மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! எங்கே (அவர் இருக்கிறார்)?” என்று கேட்க, இறைவன், ‘‘இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் (அவர் இருக்கிறார்)” என்றான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! நான் அவரைப் புரிந்துகொள்ள அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘மீன் உங்களைவிட்டுப் பிரிகின்ற இடத்தில் (அவர் இருப்பார்) என அல்லாஹ் கூறினான்” என்று அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ‘‘உயிரற்ற மீன் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்; அதற்கு உயிரூட்டப்படும் இடமே (அவர் இருக்கும் இடமாகும்) என அல்லாஹ் கூறினான்” என்று யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு (‘யூஷஉ பின் நூன்’ எனும்) தம் உதவியாளரிடம், ‘‘மீன் உம்மை விட்டுப் பிரிந்துவிடும் இடத்தை நீர் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தச் சிரமத்தையும் உமக்கு நான் தரமாட்டேன்” என்றார்கள். உதவியாளர், ‘‘(எனக்கு) நீங்கள் அதிகமான சிரமத்தைத் தரவில்லை” என்றார். ‘‘மூசா தம் உதவியாளரை நோக்கி...” என்று தொடங்கும் (18:60ஆவது) இறைவசனம்இதையே குறிப்பிடுகிறது. உதவியாளர் என்பது யூஷஉ பின் நூனைக் குறிக்கிறது. அவரது பெயர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை. மூசா (அலை) அவர்கள் ஈரப்பதம் மிகுந்த ஓரிடத்தில் பாறையொன்றின் நிழலில் இருந்துகொண்டிருந்த சமயம் அந்த மீன் (உயிர் பெற்றுக் கடலில்) துள்ளிக் குதித்தது. அப்போது மூசா (அலை) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உதவியாளர், ‘‘தாமாக விழித்தெழும்வரை நான் இவர்களை எழுப்பமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டார். இறுதியில் (மீன் உயிர் பெற்றுவிட்ட செய்தியை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார். மீன் (கூடையிலிருந்து) துள்ளிக் குதித்துக் கடலினுள் நுழைந்துகொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட, மீன் சென்ற அடையாளம் கல்லில் பதிந்தது போலானது. அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், ‘‘அந்த மீன் சென்ற (வழியின்) அடையாளம் வளையம் போலாகிவிட்டது” என்று கூறியவாறு தம்மிரு பெருவிரல்களையும் அவற்றை அடுத்துள்ள இரு (ஆட்காட்டி) விரல் களையும் வளையமிட்டு இவ்வாறெனக் காட்டினார்கள். (மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டேயிருந்தார்கள். மறுநாள் புலர்ந்தபோது, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா!) நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். அதற்கு உதவியாளர், (மூசா (அலை) அவர்களிடம், ‘அல்லாஹ் உங்களிடமிருந்து களைப்பை அகற்றிவிட்டான்” என்று கூறினார். இத்தகவல் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை. உடனே அவர்கள் இருவரும் (வந்த வழியே) திரும்பியபோது களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். அறிவிப்பாளர் உஸ்மான் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள், ‘‘களிர் (அலை) அவர்கள் கடல் நடுவி(லிருந்த தீவி)ல் பசுமையான விரிப்பொன்றின் மீது வீற்றிருந்தார்கள்” என்று என்னிடம் கூறினார்கள். (தொடர்ந்து) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: களிர் (அலை) அவர்கள், தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடிக்கொண்டு (அமர்ந்து) இருந்தார்கள். ஆடையின் ஓர் ஓரத்தைத் தம் கால்களுக்குக் கீழேயும் மற்றோர் ஓரத்தைத் தம் தலைக்குக் கீழேயும் வைத்திருந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் அன்னாருக்கு சலாம் (முகமன்) கூற, அவர் (பதில் சலாம் கூறிவிட்டு) தமது முகத்திலிருந்து (அந்த ஆடையை) விலக்கி, ‘‘எனது இந்தப் பகுதியில் (இவ்வாறு) சலாம் கூறும் வழக்கமும் உண்டா? நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘பனூ இஸ்ராயீல் களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” எனக் கேட்க, ‘‘உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்” என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள். ‘‘உங்கள் கரங்களிலுள்ள ‘தவ்ராத்’ வேதமும் உங்களுக்கு இறைச்செய்தி (வஹி) வந்துகொண்டிருப்பதும் உங்களுக்குப் போதாதா? மூசாவே! (அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு என்னிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்துகொள்வது உங்களுக்கு அவசியமாகாது. (இதைப் போன்றே அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு உங்களிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்துகொள்வது எனக்கு முறையாகாது” என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள்.7 அப்போது பறவை ஒன்று (பறந்து வந்து) தன் அலகால் கடலிலிருந்து (நீரை உறிஞ்சி) எடுத்தது. களிர் (அலை) அவர்கள் (மூசா (அலை) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பறவை தன் அலகால் இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகை யில் என் அறிவும் உங்கள் அறிவும் உள்ளது” என்றார்கள். அவர்கள் இருவரும் மரக்கலத்தில் (ஏறி) பயணம் செய்தபோது சிறு சிறு மரக்கலங்களைக் கண்டனர். அவை இக்கரைக்காரர்களை அக்கரைக்காரர் களிடம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் புரிந்துகொண்டு, ‘‘(இவர்) அல்லாஹ்வின் நல்லடியார்; இவரிடம் நாம் கட்டணம் கேட்கக் கூடாது” என்று கூறினர். -அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்: நாங்கள் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தானே?” என்று கேட்டோம். சயீத் (ரஹ்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள்.- அப்போது களிர் (அலை) அவர்கள் (வாய்ச்சியின் உதவியால்) மரக்கலத்தின் ஒரு பலகையைக் கழற்றி அந்த இடத்தில் ஒரு முளைக்குச்சியை வைத்(து அறைந்)தார்கள். (இதைக் கண்ணுற்ற) மூசா (அலை) அவர்கள் (களிர் அவர்களிடம்), ‘‘(கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின்) மரக்கலத்தை ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்துவிட்டீர்கள்!” என்று கூறினார்கள். -’அபாயமானது’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘இம்ர்’ எனும் சொல்லுக்கு ‘வெறுக்கப்பட்டது’ என்று முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.- களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் உங்களுக்கு (ஏற்கெனவே) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். (களிர் (அலை) அவர்களின் நடவடிக்கைகள் குறித்து மூசா (அலை) அவர்கள்) முதல் தடவை பொறுமை யிழந்தது மறதியினாலாகும். இரண்டாம் தடவை பொறுமையிழந்தது சார்பு நிலை (ஷர்த்) ஆகும். மூன்றாம் முறை பொறுமையிழந்தது திட்டமிட்டு நடந்ததாகும்.8 மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் (நடந்தனர். வழியில்) ஒரு சிறுவனைச் சந்திக்கவே, களிர் (அலை) அவர்கள் அவனைக் கொன்றுவிட்டார்கள். அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘களிர் (அலை) அவர்கள், (வழியில்) விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டார்கள். உடனே (அவர்களில்) இறைமறுப்பாளனாகவும் அழகாகவும் இருந்த சிறுவன் ஒருவனைப் பிடித்துப் படுக்கவைத்துக் கத்தியால் அறுத்துவிட்டார்கள்” என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள் (களிர் (அலை) அவர்களிடம்), ‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே?” என்று கூறினார்கள். -(‘ஒரு பாவமும் அறியாத’ என்பதைக் குறிக்க குர்ஆன் மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘ஸகிய்யத்’ எனும் சொல்லை மற்றோர் ஓதல் முறையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘ஸாகியத்’ என்று ஓதுவார்கள். அதற்கு ‘கீழ்ப்படிகின்றவன்’ என்பது பொருள். ‘ஃகுலாமன் ஸாகியா’ (‘கீழ்ப்படியும் சிறுவன்’) என்பதைப் போல.- மீண்டும் இருவரும் நடந்தார்கள். (இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள்.) அந்த ஊரில் கீழே விழலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். அதைக் கண்ட உடனே, களிர் (அலை) அவர்கள் அந்தச் சுவரை நிலைநிறுத்தினார்கள். -இதைக் கூறும்போது சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், தம் கையால் இவ்வாறு எனச் சாடை செய்து காட்டினார்கள்.- யஅலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘களிர் (அலை) அவர்கள், தமது கையால் சுவரைத் தடவ, அது நேராக நின்றுகொண்டது” என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன். மூசா (அலை) அவர்கள், ‘‘நீங்கள் இதற்குக் கூலி வாங்கிக்கொண்டிருக்கலாமே” என்றார்கள். ‘நாம் சாப்பிடுவதற்காக(வாவது) கூலி வாங்கியிருக்கலாமே’ என்று மூசா (அலை) அவர்கள் கூறியதாக சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (18:79ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ கான வராஅஹும் மலிக்’ (அவர்களுக்கப்பால் ஓர் அரசன் இருந்தான்) என்பதை ‘வ கான அமாமஹும் மலிக்’ (அவர்களுக்கு முன்னால் ஓர் அரசன் இருந்தான்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், ‘‘அ(ம்மன்ன)வன் (பெயர்) ‘ஹுதத் பின் புதத்’ என்றும், கொல்லப்பட்ட அச்சிறுவன் (பெயர்) ‘ஜைஸூர்’ என்றும் கருதுகின்றனர். ‘‘அந்த மரக்கலம் கடலில் (கூலி) வேலை பார்க்கும் ஏழைகள் சிலருக்குரியது. அதைப் பின்னப்படுத் தவே நான் அவ்வாறு செய்தேன். (ஏனென்றால், அம்மரக்கலம் செல்லும் மார்க்கத்தில்) இவர்களுக்குமுன் ஓர் (கொடுங்கோல்) அரசன் இருக்கிறான். அவன் (தான் காணும் நல்ல) மரக்கலங் கள் யாவற்றையும் அக்கிரமமாக அபகரித்துக்கொள்வான்” என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள். (18:79) அதாவது பின்னமான மரக்கலங்கள் அவனைக் கடந்து சென்றால் அதிலுள்ள பின்னத்தைக் கண்டு அதை அவன் விட்டுவிடுவான். மரக்கலக்காரர்கள் அவனைக் கடந்து சென்றதும் அதைப் பழுது பார்த்துப் பயன் பெற்றுக்கொள்வர். (அவர்களுடைய கையிலிருந்து மரக்கலம் போகாது). அறிவிப்பாளர்களில் சிலர், ‘‘(மரக்கலத்தில் ஏற்பட்ட) ஓட்டையைக் கண்ணாடியால் அவர்கள் அடைத்துவிட்டனர்” என்பர். வேறுசிலர், ‘‘அதைத் தாரால் அடைத்து விட்டனர்” என்பர். (கொல்லப்பட்ட சிறுவனுடைய விஷயம் என்னவெனில்,) அவனுடைய தாய், தந்தை இருவரும் (நல்ல) இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தனர்.(ஆனால்,) அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அக்கிரமம் செய்யும்படியும் (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்துவிடுவான் என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம். அதாவது அவன்மீதுள்ள பாசம் அவனது (பொய்யான) மதத்தைப் பின்பற்றும்படி அவர்களைத் தூண்டிவிடுமோ என்றஞ்சினோம். அவ்விருவருக்கும் இறைவன், இவனைவிட நல்லவனையும் பரிசுத்தமானவனையும் (பெற்றோர்மீது) அதிக அன்பு கொள்ளக்கூடியவனையும் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம் என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்?” என்று மூசா (அலை) அவர்கள் வினவி யதற்கேற்பவே இவ்வாறு களிர் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். (18:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்ரப ருஹ்மா’ எனும் சொற்றொ டருக்கு, ‘களிர் (அலை) அவர்கள் கொன்ற முதல் (சிறு)வனைவிட (பெற்றோரான) அவர்கள் இருவர்மீதும் மிகவும் அன்பு பாராட்டுபவன் என்று பொருள். ‘‘(அவனுக்குப்) பதிலாக ஒரு பெண் மகவு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது” என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அல்லாதவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது. ‘‘அ(ச்சிறுவனுக்குப் பதிலாக வழங்கப் பட்ட)து பெண் மகவாகும்” என (அறிஞர்) பலர் வாயிலாக தாவூத் பின் அபூஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني يعلى بن مسلم، وعمرو بن دينار، عن سعيد بن جبير، يزيد احدهما على صاحبه وغيرهما قد سمعته يحدثه عن سعيد قال انا لعند ابن عباس في بيته، اذ قال سلوني قلت اى ابا عباس جعلني الله فداك بالكوفة رجل قاص يقال له نوف، يزعم انه ليس بموسى بني اسراييل، اما عمرو فقال لي قال قد كذب عدو الله، واما يعلى فقال لي قال ابن عباس حدثني ابى بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم " موسى رسول الله عليه السلام قال ذكر الناس يوما حتى اذا فاضت العيون، ورقت القلوب ولى، فادركه رجل، فقال اى رسول الله هل في الارض احد اعلم منك قال لا، فعتب عليه اذ لم يرد العلم الى الله قيل بلى قال اى رب فاين قال بمجمع البحرين قال اى رب اجعل لي علما اعلم ذلك به ". فقال لي عمرو قال " حيث يفارقك الحوت ". وقال لي يعلى قال " خذ نونا ميتا حيث ينفخ فيه الروح، فاخذ حوتا فجعله في مكتل فقال لفتاه لا اكلفك الا ان تخبرني بحيث يفارقك الحوت. قال ما كلفت كثيرا فذلك قوله جل ذكره {واذ قال موسى لفتاه} يوشع بن نون ليست عن سعيد قال فبينما هو في ظل صخرة في مكان ثريان، اذ تضرب الحوت، وموسى نايم، فقال فتاه لا اوقظه حتى اذا استيقظ نسي ان يخبره، وتضرب الحوت، حتى دخل البحر فامسك الله عنه جرية البحر حتى كان اثره في حجر قال لي عمرو هكذا كان اثره في حجر، وحلق بين ابهاميه واللتين تليانهما لقد لقينا من سفرنا هذا نصبا قال قد قطع الله عنك النصب ليست هذه عن سعيد اخبره، فرجعا فوجدا خضرا قال لي عثمان بن ابي سليمان على طنفسة خضراء على كبد البحر قال سعيد بن جبير مسجى بثوبه قد جعل طرفه تحت رجليه، وطرفه تحت راسه، فسلم عليه موسى، فكشف عن وجهه، وقال هل بارضي من سلام من انت قال انا موسى. قال موسى بني اسراييل قال نعم. قال فما شانك قال جيت لتعلمني مما علمت رشدا. قال اما يكفيك ان التوراة بيديك، وان الوحى ياتيك، يا موسى ان لي علما لا ينبغي لك ان تعلمه وان لك علما لا ينبغي لي ان اعلمه، فاخذ طاير بمنقاره من البحر وقال والله ما علمي وما علمك في جنب علم الله الا كما اخذ هذا الطاير بمنقاره من البحر، حتى اذا ركبا في السفينة وجدا معابر صغارا تحمل اهل هذا الساحل الى اهل هذا الساحل الاخر عرفوه، فقالوا عبد الله الصالح قال قلنا لسعيد خضر قال نعم لا نحمله باجر، فخرقها ووتد فيها وتدا. قال موسى اخرقتها لتغرق اهلها لقد جيت شييا امرا قال مجاهد منكرا قال الم اقل انك لن تستطيع معي صبرا كانت الاولى نسيانا والوسطى شرطا والثالثة عمدا قال لا تواخذني بما نسيت ولا ترهقني من امري عسرا، لقيا غلاما فقتله قال يعلى قال سعيد وجد غلمانا يلعبون، فاخذ غلاما كافرا ظريفا فاضجعه، ثم ذبحه بالسكين. قال اقتلت نفسا زكية بغير نفس لم تعمل بالحنث وكان ابن عباس قراها زكية زاكية مسلمة كقولك غلاما زكيا فانطلقا، فوجدا جدارا يريد ان ينقض فاقامه قال سعيد بيده هكذا ورفع يده فاستقام قال يعلى حسبت ان سعيدا قال فمسحه بيده فاستقام، لو شيت لاتخذت عليه اجرا قال سعيد اجرا ناكله وكان وراءهم، وكان امامهم قراها ابن عباس امامهم ملك يزعمون عن غير سعيد انه هدد بن بدد، والغلام المقتول، اسمه يزعمون جيسور ملك ياخذ كل سفينة غصبا، فاردت اذا هي مرت به ان يدعها لعيبها، فاذا جاوزوا اصلحوها فانتفعوا بها ومنهم من يقول سدوها بقارورة ومنهم من يقول بالقار، كان ابواه مومنين، وكان كافرا فخشينا ان يرهقهما طغيانا وكفرا، ان يحملهما حبه على ان يتابعاه على دينه فاردنا ان يبدلهما ربهما خيرا منه زكاة لقوله اقتلت نفسا زكية واقرب رحما هما به ارحم منهما بالاول، الذي قتل خضر وزعم غير سعيد انهما ابدلا جارية، واما داود بن ابي عاصم فقال عن غير واحد انها جارية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4726
- Book Index
- 248
Grades
- -
