ஹதீஸ்கள்
#4725
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘களிர் (அலை) அவர்களுடைய சம காலத்தவரான மூசா, இஸ்ரவேலர்களின் இறைத்தூதரான மூசா (அலை) அல்லர். (அவர் வேறொரு மூசா) என்று (பேச்சாளரான) நவ்ஃப் அல்பிகாலி3 கூறுகிறாரே!” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் விரோதி பொய் உரைத்துவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுற்றதாக எமக்கு அறிவித்துள்ளார்கள்: (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள், இஸ்ரவேலர்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில் மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘(இல்லை;) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்!) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். எனவே, மூசா (அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். தம்முடன் தம் உதவியாளர் யூஷஉ பின் நூனையும் அழைத்துக் கொண்டார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினார்கள். கூடையிலிருந்த அந்த மீன் கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. நீரோட்டத்தை மீனைவிட்டு அல்லாஹ் தடுத்துவிடவே அதைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது. மூசா (அலை) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தபோது அன்னாருடைய தோழர் (யூஷஉ) மீனைப் பற்றி அன்னாருக் குத் தெரிவிக்க மறந்துவிட்டார். எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் (தம் பயணத்தில் தொடர்ந்து) நடந்தனர்.மறுநாள் ஆனபோது மூசா தம் உதவி யாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவாரும்! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். (18:62) அல்லாஹ் தமக்குக் கட்டளையிட்ட (இடத்)தை தாண்டிச் செல்லும்வரை, மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர், ‘‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக்கொண்டது” என்று கூறினார். (18:63) -அது மீனுக்குப் பாதையாகவும் மூசா (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய உதவியாளருக்கும் வியப்பாகவும் அமைந்தது.- அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று கூறினார்கள். உடனே அவர்களிருவரும் தங்கள் அடிச்சுவடு களைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள். அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் மூடியபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் (களிர்), ‘‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?” என்று வினவினார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, ‘‘உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாக உமக்கு அதனை அறிவிக்கும்வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கலாகாது” என்று கூறினார். பிறகு (மூசா, களிர்) இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் (மூவரும்) தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழை களான மரக்கல உரிமையாளர்கள்) களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை(த் தங்கள் மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர். இருவரும் மரக்கலத்தில் ஏறியதுதான் தாமதம்; களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றால் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் திடுக்குற்றார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் களிரை நோக்கி, ‘‘கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு களிர், ‘‘என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்து, என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள்” என்று கூறினார்கள். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.- (அப்போது) சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, தன் (சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒருமுறை உறிஞ்சி (நீர் அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள், ‘‘உம்முடைய அறிவும் என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு)” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் மரக்கலத்திóருந்து வெளியேறி, கடலோரமாக நடந்து கொண்டிருந்தபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்ட களிர் (அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்துவிட்டீர் கள்!” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களுக்கு நான் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். -(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைôனா (ரஹ்) அவர்கள் ‘‘இம்முறை களிர் (அலை) அவர்கள் கூறியது, முதல்முறை கூறியதைவிட (சற்று)க்கடுமையானதாகும்” என்று கூறினார்கள்.4- அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவருக் கும் விருந்தோம்பல் செய்ய மறுத்து விட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக் கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர் (அலை) அவர்கள் அந்தச் சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். அப்போது மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த மக்களிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம், இவர்கள் நமக்கு உணவளிக்கவு மில்லை; விருந்தோம்பல் செய்யவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களின் சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத் திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். (இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூசா பொறுமையாக இருந்திப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகளை) நமக்கு இறைவன் அறிவித்திருப்பான் என்று நாம் விரும்பினோம்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுஃது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா” என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன் வ கான அபவாஹு முஃமினைனி” என்று ஓதுவார்கள். (பொருள்: அச்சிறுவன் இறைமறுப்பாள னாகவும் அவனுடைய தாய் தந்தை இறைநம்பிக்கையாளர்களாகவும் இருந் தனர்”)5 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4725
- Book Index
- 247
Grades
- -