ஹதீஸ்கள்
#4677
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையும் (தபூக் போரில் கலந்துகொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்உஸ்ரா' (எனும் தபூக்) போர், பத்ர் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்த அறப்போரிலும் நான் கலந்துகொள்ளாமல் ஒருபோதும் இருந்ததில்லை. மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக் போரில் கலந்துகொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள். (அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆகவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு இறுதித் தொழுகை தொழுவிக்காமல் இருந்துவிடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு இறுதித் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பதுதான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக் கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு சலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்க விடாமல் செய்து விடுவார்கள்” என்றார்கள். ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். -நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும். (போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில்தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளி னான். போரில் கலந்துகொள்ளாமலிருந்த வர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அது போல் யாரைக் குறித்தும் பேசப் பட்டதில்லை. தூயோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)23 அத்தியாயம் :
حدثني محمد، حدثنا احمد بن ابي شعيب، حدثنا موسى بن اعين، حدثنا اسحاق بن راشد، ان الزهري، حدثه قال اخبرني عبد الرحمن بن عبد الله بن كعب بن مالك، عن ابيه، قال سمعت ابي كعب بن مالك،، وهو احد الثلاثة الذين تيب عليهم انه لم يتخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة غزاها قط غير غزوتين غزوة العسرة وغزوة بدر. قال فاجمعت صدق رسول الله صلى الله عليه وسلم ضحى، وكان قلما يقدم من سفر سافره الا ضحى وكان يبدا بالمسجد، فيركع ركعتين، ونهى النبي صلى الله عليه وسلم عن كلامي وكلام صاحبى، ولم ينه عن كلام احد من المتخلفين غيرنا، فاجتنب الناس كلامنا، فلبثت كذلك حتى طال على الامر، وما من شىء اهم الى من ان اموت فلا يصلي على النبي صلى الله عليه وسلم او يموت رسول الله صلى الله عليه وسلم فاكون من الناس بتلك المنزلة، فلا يكلمني احد منهم، ولا يصلي على، فانزل الله توبتنا على نبيه صلى الله عليه وسلم حين بقي الثلث الاخر من الليل، ورسول الله صلى الله عليه وسلم عند ام سلمة، وكانت ام سلمة محسنة في شاني معنية في امري، فقال رسول الله صلى الله عليه وسلم " يا ام سلمة تيب على كعب ". قالت افلا ارسل اليه فابشره قال " اذا يحطمكم الناس فيمنعونكم النوم ساير الليلة ". حتى اذا صلى رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر اذن بتوبة الله علينا، وكان اذا استبشر استنار وجهه حتى كانه قطعة من القمر، وكنا ايها الثلاثة الذين خلفوا عن الامر الذي قبل من هولاء الذين اعتذروا حين انزل الله لنا التوبة، فلما ذكر الذين كذبوا رسول الله صلى الله عليه وسلم من المتخلفين، واعتذروا بالباطل، ذكروا بشر ما ذكر به احد قال الله سبحانه {يعتذرون اليكم اذا رجعتم اليهم قل لا تعتذروا لن نومن لكم قد نبانا الله من اخباركم وسيرى الله عملكم ورسوله} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4677
- Book Index
- 199
Grades
- -
