ஹதீஸ்கள்
#4531
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் அபீநஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள்” (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (கணவன் இறந்துபோன) அந்தப்பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த “இத்தா'வைத் தம் கணவனு டைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில்இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது.” எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) இறுதி விருப்ப(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் இறுதி விருப்பப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப்பின்) வெளியேறிக்கொள்ளலாம். இதைத்தான், “வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) “இத்தா' கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65 (ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் “இத்தா' இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருப்பாள். இதையே, “(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் தெரிவிப்பார்களாக” எனும் இந்த இறை வசனத்தொடர் குறிக்கின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் “இத்தா' இருப்பாள். தனக்காகத் தெரிவிக்கப்பட்ட இறுதி விருப்பத்தில் கண்டுள்ளபடி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66 இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போலவே அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا روح، حدثنا شبل، عن ابن ابي نجيح، عن مجاهد، {والذين يتوفون منكم ويذرون ازواجا} قال كانت هذه العدة تعتد عند اهل زوجها واجب، فانزل الله {والذين يتوفون منكم ويذرون ازواجا وصية لازواجهم متاعا الى الحول غير اخراج فان خرجن فلا جناح عليكم فيما فعلن في انفسهن من معروف} قال جعل الله لها تمام السنة سبعة اشهر وعشرين ليلة وصية، ان شاءت سكنت في وصيتها، وان شاءت خرجت، وهو قول الله تعالى {غير اخراج فان خرجن فلا جناح عليكم} فالعدة كما هي واجب عليها. زعم ذلك عن مجاهد. وقال عطاء قال ابن عباس نسخت هذه الاية عدتها عند اهلها، فتعتد حيث شاءت، وهو قول الله تعالى {غير اخراج}. قال عطاء ان شاءت اعتدت عند اهله وسكنت في وصيتها، وان شاءت خرجت لقول الله تعالى {فلا جناح عليكم فيما فعلن}. قال عطاء ثم جاء الميراث فنسخ السكنى فتعتد حيث شاءت، ولا سكنى لها. وعن محمد بن يوسف حدثنا ورقاء عن ابن ابي نجيح عن مجاهد بهذا. وعن ابن ابي نجيح عن عطاء عن ابن عباس قال نسخت هذه الاية عدتها في اهلها، فتعتد حيث شاءت لقول الله {غير اخراج} نحوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4531
- Book Index
- 54
Grades
- -
