ஹதீஸ்கள்
#4357
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “சரி (விடுவிக்கிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே, “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையால் என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. “துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த “கஸ்அம்' மற்றும் “பஜீலா' குலத் தாரின் ஆலயமாகும். அதில், வழிபாடு செய்யப்பட்டுவந்த பலிபீடங்கள் இருந்தன. அது “அல்கஅபா' என்று அழைக்கப் பட்டுவந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்துவிட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறி கேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக்கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்துவிடுவார்கள்” என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்துகொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். அப்போது நான் (அம்மனிதரிடம்), “நீ இந்த அம்புகளை உடைத்தெறிந்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை' என்று நீ உறுதிமொழி சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்” என்று சொன்னேன். அவ்வாறே அவர் அவற்றை உடைத்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று உறுதிமொழி கூறினார். பிறகு “அஹ்மஸ்' குலத்தாரில் “அபூஅர்த்தாத்' என்னும் (குறிப்புப்) பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் (அந்த ஆலயம் அழிக்கப்பட்ட) இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அதைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுதான் (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) “அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும் படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4357
- Book Index
- 383
Grades
- -