ஹதீஸ்கள்
#4251
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “துல்கஅதா' மாதத்தில் உம்ரா செய்யச் சென்றபோது மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மறுத்தார்கள். இறுதியில், நபி (ஸல்) அவர்கள், “மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாட்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும்' எனும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, “இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்த நிபந்தனைகள்' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், “நாங்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்புவோமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்கமாட்டோம்; ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்” என்று பதிலளித்துவிட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, “ ”அல்லாஹ்வின் தூதர்' என்பதை அழித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், “முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (தகுதியைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்தார்கள் -அவர்களுக்கு எழுதத் தெரிந்திருக்கவில்லை- பிறகு, “இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஆகும். அதன் விவரமாவது: (முஸ்லிம்களில் எவரும்) உறையிலிட்ட வாளைத் தவிர வேறு ஆயுதங்களை மக்காவிற்குள் கொண்டுவரக் கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும்கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது” என்று எழுதி(விடுமாறு கூறி)னார்கள். (அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாட்கள்) முடிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, “உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் முடிந்துவிட்டது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டு) வெளியேறினார்கள். அப்போது (உஹுத் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அநாதை) மகள், “என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!” என்று (கூவிக்கொண்டே) நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், “இவளை எடுத்துக்கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கிவைத்துக்கொள்” என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், “அவளை நான்தான் வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டுச் சச்சரவிட்டுக்கொண்)டனர். அலீ (ரலி) அவர்கள், “நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், “இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை (அஸ்மா பின்த் உமைஸ்) என் மனைவியாவார்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், “(இவள், நபியவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் வந்த) என் சகோதரரின் மகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்குச் சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள், அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், “சிற்றன்னை அன்னையின் இடத்தில் இருக்கிறாள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். மேலும், ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)” என்று கூறினார்கள்.297 அலீ (ரலி) அவர்கள், “தாங்கள் ஹம்ஸாவின் மகளை மணமுடித்துக் கொள்ளக் கூடாதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகள் ஆவாள். (ஆகவே, நான் அவளை மணமுடிக்க முடியாது)” என்று சொன்னார்கள்.298 அத்தியாயம் :
حدثني عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال لما اعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة، فابى اهل مكة ان يدعوه يدخل مكة، حتى قاضاهم على ان يقيم بها ثلاثة ايام، فلما كتبوا الكتاب كتبوا، هذا ما قاضى عليه محمد رسول الله. قالوا لا نقر بهذا، لو نعلم انك رسول الله ما منعناك شييا، ولكن انت محمد بن عبد الله. فقال " انا رسول الله، وانا محمد بن عبد الله ". ثم قال لعلي " امح رسول الله ". قال علي لا والله لا امحوك ابدا. فاخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب، وليس يحسن يكتب، فكتب هذا ما قاضى محمد بن عبد الله لا يدخل مكة السلاح، الا السيف في القراب، وان لا يخرج من اهلها باحد، ان اراد ان يتبعه، وان لا يمنع من اصحابه احدا، ان اراد ان يقيم بها. فلما دخلها ومضى الاجل اتوا عليا فقالوا قل لصاحبك اخرج عنا، فقد مضى الاجل. فخرج النبي صلى الله عليه وسلم فتبعته ابنة حمزة تنادي يا عم يا عم. فتناولها علي، فاخذ بيدها وقال لفاطمة عليها السلام دونك ابنة عمك. حملتها فاختصم فيها علي وزيد وجعفر. قال علي انا اخذتها وهى بنت عمي. وقال جعفر ابنة عمي وخالتها تحتي. وقال زيد ابنة اخي. فقضى بها النبي صلى الله عليه وسلم لخالتها وقال " الخالة بمنزلة الام ". وقال لعلي " انت مني وانا منك ". وقال لجعفر " اشبهت خلقي وخلقي ". وقال لزيد " انت اخونا ومولانا ". وقال علي الا تتزوج بنت حمزة. قال " انها ابنة اخي من الرضاعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4251
- Book Index
- 286
Grades
- -
