ஹதீஸ்கள்
#4102
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர் களின் வயிறு (பசியால்) மிகவும் ஒட்டி யிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, “நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப்போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?” என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு “ஸாஉ' அளவு தொலிநீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடிக்கும்போது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும் அதைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். (“உணவு கொஞ்சம்தான் இருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)” என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு “ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், “அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “நான் வரும்வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள். நான் என் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி (ஸல்) அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்துகொண்டார். அப்போது நான், “நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திருவாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் வளம் கொழிக்கப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து வளம் கொழிக்கப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), “ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைப்பீராக. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பீராக. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே” என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர். ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.176 அத்தியாயம் :
حدثني عمرو بن علي، حدثنا ابو عاصم، اخبرنا حنظلة بن ابي سفيان، اخبرنا سعيد بن ميناء، قال سمعت جابر بن عبد الله رضى الله عنهما قال لما حفر الخندق رايت بالنبي صلى الله عليه وسلم خمصا شديدا، فانكفات الى امراتي فقلت هل عندك شىء فاني رايت برسول الله صلى الله عليه وسلم خمصا شديدا. فاخرجت الى جرابا فيه صاع من شعير، ولنا بهيمة داجن فذبحتها، وطحنت الشعير ففرغت الى فراغي، وقطعتها في برمتها، ثم وليت الى رسول الله صلى الله عليه وسلم فقالت لا تفضحني برسول الله صلى الله عليه وسلم وبمن معه. فجيته فساررته فقلت يا رسول الله ذبحنا بهيمة لنا وطحنا صاعا من شعير كان عندنا، فتعال انت ونفر معك. فصاح النبي صلى الله عليه وسلم فقال " يا اهل الخندق، ان جابرا قد صنع سورا فحى هلا بكم ". فقال رسول الله صلى الله عليه وسلم " لا تنزلن برمتكم، ولا تخبزن عجينكم حتى اجيء ". فجيت وجاء رسول الله صلى الله عليه وسلم يقدم الناس حتى جيت امراتي، فقالت بك وبك. فقلت قد فعلت الذي قلت. فاخرجت له عجينا، فبصق فيه وبارك، ثم عمد الى برمتنا فبصق وبارك ثم قال " ادع خابزة فلتخبز معي واقدحي من برمتكم ولا تنزلوها"، وهم الف، فاقسم بالله لقد اكلوا حتى تركوه وانحرفوا، وان برمتنا لتغط كما هي، وان عجيننا ليخبز كما هو
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4102
- Book Index
- 146
Grades
- -
