ஹதீஸ்கள்
#3700
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்குமுன் மதீனாவில் அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கும், உஸ்மான் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களுக்கும் அருகில் நின்றுகொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, “(சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்?64 அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை” என்றனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,”அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச் சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள்” என்றார்கள். அந்த இருவரும், “இல்லை. (அதன் சக்திக்கேற்பவே வரி விதித்தோம்)” என்று பதிலளித்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக்வாசி களின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில்தான் விட்டுச் செல்வேன்” என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாட்கள்கூட சென்றிருக்காது. அதற்குள் (கத்தியால்) உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்டு விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்குமுன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), “சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே இடைவெளியை காணாதபோதுதான் முன்சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் “யூசுஃப்' அத்தியாயம் (12) அல்லது “அந்நஹ்ல்' அத்தியாயம் (16) அல்லது அது போன்ற(வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகைக்காக வந்து சேரும்வரையில் முதல் ரகஅத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போதுதான் தக்பீர் கூறியிருப்பார்கள். “என்னை நாய் கொன்றுவிட்டது- அல்லது தின்றுவிட்டது-” என்று கூறினார்கள் (அப்போது “அபூலுஃலுஆ ஃபைரோஸ்' என்பவன் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந் தான்).65 உடனே அந்த “இல்ஜ்' (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தனது கத்தியை எடுத்துக்கொண்டு தனது வலப் பக்கம், இடப் பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக்கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதிமூன்று ஆண்களை அவன் குத்திவிட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக்கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (கழற்றி) அவன்மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தான் பிடிபட்டுவிடுவோம் என்று எண்ணிய போது தன்னைத்தானே அறுத்துக்(கொண்டு தற்கொலை செய்து)கொண்டான். மேலும், (தொழுவித்துக்கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுவிப்ப தற்காகத் தம்மிடத்தில்) முன்நிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர் (ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளிவாசலின் மூலைகளில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுவித்துக்கொண்டிருந்த) உமர் (ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் “சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்) என்று கூறிக்கொண்டி ருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுவித்தார்கள். மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர் (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள்” என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, “முஃகீராவின் அடிமைதான் (உங்களைக் குத்தியவன்)” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “அந்தத் திறமையான தொழிற் கலைஞனா?” என்று கேட்டார்கள். “ஆம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். “ அவனை அல்லாஹ் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத்தானே நான் உத்தரவிட்டேன்! (ஆனால், என்னையே அவன் கொன்றுவிட்டானே!) தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரது கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்துவிடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபியர் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபியர் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக்கூடியவர்களாக இருந்தீர்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்களிடையே அப்பாஸ் (ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி), “நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபியரல்லாத தொழிற் கலைஞர்கள் அனைவரையும்) கொன்றுவிடுகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் (சொல்வது தவறு. உங்களது மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களது கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே “ஹஜ்' செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப் போகிறீர்கள்?)”என்று கேட்டார்கள். பிறகு (குற்றுயிராயிருந்த) உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராததைப் போன்று மக்கள் (கடுந்துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், “அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது” என்கிறார். மற்றொருவர், “அவருக்கு (மரணம் சம்பவித்துவிடும் என்று) நான் அஞ்சுகிறேன்” என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டுவரப்பட்டது. அதை உமர் (ரலி) அவர்கள் அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்துகொண்டனர். அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப்) பதவியேற்று (குடிமக்களிடையே) நீதியாக நடந்துகொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்யவிருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்” என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் “இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்குச்) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரது கீழங்கி பூமியைத் தொட்டுக்கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்தபோது), “எனது சகோதரரின் மகனே! உமது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டுவீராக! இது உமது ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உம்முடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள். (பிறகு தம் மகனை நோக்கி), “உமரின் மகன் அப்துல்லாஹ்வே! என்மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்/தீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்துவிடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ பின் கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்)கொள். அவர்களது செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நமது குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்)கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய)பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்துவிடு!. (பிறகு) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீ சென்று, “உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு. “இறைநம்பிக்கையாளர் களின் தலைவர்' (அமீருல் முஃமினீன்) என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) இறைநம்பிக்கையாளர்களுக்கு (ஆட்சித்) தலைவன் அல்லன். மேலும், (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்) “உமர் தம்முடைய இரு தோழர்கள் (நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களது அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்” எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட செய்தி யறிந்து) அழுதுகொண்டு அமர்ந் திருப்பதைக் கண்டார். அப்போது, அவர் அவர்களைப் பார்த்து, “(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம்முடைய இரு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்” என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னைவிட அவருக்கே முதலிடம் கொடுத்துவிட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக்கொள்ளுங்கள்)” என்று கூறினார்கள். பிறகு அவர் (உமர் (ரலி) அவர்களிடம்) திரும்பி வந்தபோது, “இதோ, உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர் (ரலி) அவர்கள், “என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்” என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தம்மோடு அவர்களை அணைத்துக்கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் மகனை நோக்கி), “உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?” என்று கேட்டார்கள். “நீங்கள் விரும்பியதுதான், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அவர்கள்) அனுமதித்துவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் கூறினார்கள். (அப்போது) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்குக் கவலையளித்துக்கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டுசெல்லுங்கள். பிறகு ஆயிஷா அவர்களுக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடத்தில்) உமர் பின் அல் கத்தாப் (ரலி) (தம்முடைய இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒருமுறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் பொது) அடக்கத்தலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்டபோது எழுந்துவிட்டோம். உமர் (ரலி) அவர்களிடத்தில் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடத்தில் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உடனே அவர்களுக்குள்ள நுழைவிடம் ஒன்றில் நுழைந்துகொண்டார்கள். உள்ளேயிருந்து அவர்கள் அழுகின்ற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம். (அங்கிருந்த ஆண்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி), “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி விருப்பம் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர்தான் -அல்லது அந்தக் குழுவினர்தான்- இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரைவிடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்” என்று கூறிவிட்டு, அலீ (ரலி), உஸ்மான் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), தல்ஹா (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகி யோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும் உமர் (ரலி) அவர்கள், “உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமில்லை - இதை மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆறுதல் போலக் கூறினார்கள்.- தலைமைப் பதவி சஅத் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர்தான். அவ்வாறு அவருக்குக் கிடைக்கவில்லை யாயின், உங்களில் எவர் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறாரோ அவர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெற்றுக்கொள்ளட் டும். ஏனெனில், நான் சஅத் (ரலி) அவர் களை, அவர் இயலாதவர் என்பதாலோ அல்லது மோசடி செய்துவிட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை. மேலும், “(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், (நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தமது இருப்பிடமாகக் கொண்டு, இறைநம்பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக்கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரது நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்பட வேண்டும். (இதே போல) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும்படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர்; நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களது வீரத்தாலும் பெரும் எண்ணிக்கையாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவை களுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். அதையும் அவர் களின் சம்மதத்துடன்தான் எடுக்க வேண்டும். மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்வீக அரபியரும், இஸ்லாத் தின் அடிப்படையும் ஆவார்கள். அவர் களுடைய செல்வத்தில் மலிவானவை மட்டுமே பெறப்பட்டு அவர்களிடையே யுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களுடைய எதிரிகள் அவர்களைத் தாக்க வரும்போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும்போது) அவர்களது சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற் குள்ளாக்கப்படக் கூடாது எனவும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.66 (கத்திக்குத்துக்கு உள்ளாகி மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு அவர்களைத் தூக்கிக்கொண்டு (அவர்களது இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு) சலாம் சொன்னார்கள். பிறகு, “(உங்களுக்குரிய அறையில் தம் இரு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அவர்களை உள்ளே கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் (உடைய உடல்) உள்ளே கொண்டுசெல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களுடைய இரு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறுபேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களது உரிமையை உங்களில் மூன்று பேரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை அலீ (ரலி) அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு தல்ஹா (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை நான் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள், “எனது அதிகாரத்தை நான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களையும் உஸ்மான் (ரலி) அவர்களையும் நோக்கி), “உங்கள் இருவரில் யார் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக்கொள்(ள முன்வரு)கிறாரோ அவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும் இஸ்லாமும் அவர்மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். அப்போது இரு மூத்தவர்(களான உஸ்மான் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்)களும் மௌனமாக இருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லையென்பதை அல்லாஹ் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறான்” என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் “ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)” என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவருடைய (அலீ (ரலி) அவர்களுடைய) கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பிடித்துக்கொண்டு “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டே யிருக்கின்றான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்துகொள்வீர்கள். உஸ்மான் (ரலி) அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்” என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) தனியே வந்து அலீ (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) கூறினார்கள். (இரு மூத்தவர்களிடமும்) வாக்குறுதி வாங்கியபின், “உஸ்மான் அவர்களே! தங்களது கையைத் தாருங்கள்” என்று கூறி (உஸ்மான் (ரலி) அவர்களது கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்துகொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனாவாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்துகொடுத்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3700
- Book Index
- 50
Grades
- -