ஹதீஸ்கள்
#3699
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எகிப்துவாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தில் ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷியர்” என்று கூறினர். அவர், “இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர். உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களை நோக்கி) “இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது (போர்க்களத்திலிருந்து) வெருண் டோடியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் ஹுதைபியாவில் நடந்த “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?”62 என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்ததைப் போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும் படி) “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லை யென்று) உமக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவம் சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.63 பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி) உஸ்மான் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர்' போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டி னார்கள். பிறகு “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்' என (இப்னு உமர் (ரலி) அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீர் போகலாம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3699
- Book Index
- 49
Grades
- -