ஹதீஸ்கள்
#520
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayers (Salat)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுதுகொண்டிருந் தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழு ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், “(பொது இடத்தில் தொழும்) இந்தப் பகட்டுக்காரரை நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கூறிவிட்டு, “உங்களில் யார், இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று, அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும், அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவருடைய தோள்கள் மத்தியில் வைக்கத் தயார்?” என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது அவர்களு டைய தோள்கள் மத்தியில் அ(ந்த அசுத்தத்)தை அவன் போட்டான். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தவாறே இருந்தார்கள். (இதைப் பார்த்துக்கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள்.- (செய்தி அறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களைத் தம்மைவிட்டு எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிராத்தித்தார்கள்: “இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, “அல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூ ஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித் துக்கொள்வாயாக!” என்று (ஏழு பேரின்) பெயர்களைக் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள். தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாருக்கெதிராகப் பிராத்தித்தார்களோ அவர்களில் உமாரா பின் அல்வலீத் நீங்கலாக மற்ற) அனைவரும் பத்ருப் போர் நாளில் (உடல் உப்பி உருக்குலைந்து) மாண்டு கிடந்ததையும், பின்னர் ‘கலீபு பத்ர்’ எனும் பாழுங்கிணற்றை நோக்கி அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பாழுங்கிணற்றில் உள்ளோரை (இனியும்) சாபம் தொடரும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #520
- Book Index
- 167
Grades
- -